சுவிஸ் புதிய ஜனாதிபதி பதவியேற்பு ஆண்டுக்கு ஒர் அதிபர் தெரிவு முறை!
சுவிற்சர்லாந்து நாட்டுக்கான புதிய ஆண்டின் அதிபராக பொருளாதார அமைச்சர் கை பார்மலின் (Guy Parmelin)தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான Vaud என்னும் கன்ரன் பகுதியைச் சேர்ந்தவர் கை பார்மலின். வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் உறுப்பினரான அவர், கன்ரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் (Federal Council) எனப்படும் அதிகார பீடத்துக்கு 2015 இல் தெரிவானவர்.சுவிஸின் அதிபர் தெரிவு முறை தனித்துவமானது.
அங்கு அதிபர் பதவி என்பது வெறும் சம்பிரதாயபூர்வமான ஒன்று.அதிபருக்கு என்று தனியான அதிகாரம் எதுவும் கிடையாது. உண்மையில் நாட்டை நிர்வகிக்கும் உயர் அதிகாரம் அதன் ஏழு பேர் கொண்ட சமஷ்டிக் கவுன்சிலிடமே (Federal Council) உள்ளது.அந்த ஏழு உறுப்பினர்களுமே முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகிக்கின்றனர். சமஷ்டி கவுன்சிலில் இடம்பெறும் அமைச்சுப் பொறுப்புள்ள அந்த ஏழு பேரில் இருந்து வருடாந்தம் ஒருவர் நாட்டின் அதிபராகத் தெரிவு செய்யப்படுகிறார்.
மத்திய சமஷ்டி நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கைப் பொறுத்து ஒருவர் இரண்டு தடவைகள் அதிபராகத் தெரிவாகுவதற்கும் வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டில் அதிபராக விளங்கிய சிமோனெட்டா சோமருகா(Simonetta Sommaruga) 2015 இலும் அதிபராகப் பதவி வகித்தவர். சமஷ்டி நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பில் செல்லுபடியான 202 வாக்குகளில் 188 வாக்குகளைப் பெற்று கை பார்மலின் புதிய ஆண்டின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டார்.
துணை அதிபராக தற்போதைய வெளிவிவகார அமைச்சர் Ignazio Cassis தெரிவானார். இவர் அடுத்த 2022 ஆம் ஆண்டு அதிபராகத் தெரிவாகக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறார்.
61 வயதான புதிய அதிபர் கை பார்மலின் பொருளாதார அமைச்சராகப் பதவி வகித்த சமயம் அவரது அரைகுறை ஆங்கிலம் கடும் விமர்சனங்களைச் சந்தித்ததுண்டு.
நேர்காணல் ஒன்றின் போது அவரது ஆங்கில உரையாடல் திறனை ‘நியூயார்க் டைம்ஸ்’ விமர்சித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஆங்கிலம் பேச முடியாத ஒருவர் அதிபராக இருப்பது நாட்டின் வெளி விவகாரங்களைக் கையாள்வதில் குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்றும் விமர்சனம் உள்ளது. ஆயினும் சுவிஸ் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்களது இந்த ஆங்கில மொழி அறிவு இன்மை புதிதான ஒன்றல்ல.
குமாரதாஸன். பாரிஸ்.