ஐரோப்பாவின் அதியுயரத்திலிருக்கும் ரயில்வே நிலையம் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோறியிருக்கிறது.

சுவிஸில் அல்ப்ஸ் மலைக் குன்றுகள் ஒன்றிலிருக்கும் Jungfraujoch என்ற இடத்திலிருந்து Kleine Scheidegg என்ற இடத்துக்குப் போகும் ரயில்பாதையில் இருக்கும் பாதாள ரயில் நிலையமொன்றே ஐரோப்பாவின் அதிக உயரத்திலிருக்கும் ரயில் நிலையமாகும். கடல் மட்டத்திலிருந்து 3,454 மீற்றர் உயரத்திலிருக்கும் அந்த ரயில் நிலையம் சுவிஸின் மிக முக்கியமான சுற்றுலாப் பயணத் தலங்களிலொன்றாகும்.

கடந்த வருடம் 362,800 பேர் இந்த ரயில் நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இவ்வருடமும் இதே இலக்கத்தை அங்கு எதிர்பார்க்கிறார்கள். 2019 ம் ஆண்டு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது அத்தொகை மூன்றிலொரு விகிதமே என்று குறிப்பிடப்படுகிறது. அங்கே வருபவர்களில் 70 விகிதமானவர்கள் ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களாகும். 

ஆசிய நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவுக்குள் வரமுடியாத நிலைமையிருப்பதால் இந்த சுற்றுலாத் தலம் சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாட்டுப் பயணிகளின் வருகையையே நம்பியிருக்கின்றது. ஆனாலும், இவ்வருடம் அது நடக்குமென்று நம்பமுடியாத நிலைமையில் இருப்பதாக அந்த ரயில் நிலைய நிறுவனம் தெரிவிக்கிறது.

சுவிஸ் அரசு தனது நாட்டின்சுற்றுலா நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்ய சுமார் 43 மில்லியன் டொலரை உதவியாகக் கொடுக்கவிருக்கிறது. சுவிஸ் நாட்டவர் தவிர பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாட்டவர்களின் சுற்றுலாத் தொகை வழக்கத்தை விட அங்கே சிறிய அளவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்குமிடங்களைப் பொறுத்தவரை மொத்தத்தில், கடந்த வருடத்தை விட மேலும் 5 விகிதம் குறைவான அளவிலேயே வாடகைக்குப் போகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ம் ஆண்டிலேயே நாட்டின் சுற்றுலாத் துறை மீண்டும் தலைதூக்கும் நிலைமை உண்டாகுமென்று கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *