பத்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாட்டின் இராணுவத்தை நாட்டின் அரசியலுக்குள் இழுக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்!
டிரம்ப் பதவியிலிருத்திவிட்டுத் தூக்கியெறிந்த இரண்டு பாதுகாப்பு அமைச்சர்கள் உட்பட உயிரோடிருக்கும் அமெரிக்காவின் முன்னாள் பத்து பாதுகாப்பு அமைச்சர்களும் டிர்ம்ப்புக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். வரவிருக்கும் ஜனாதிபதி மாற்றத்தினுள் நாட்டின் இராணுவத்தை இழுக்க வேண்டாம் என்ற கோரிக்கையே அதுவாகும்.
“ஒரு அமைதியான அரசியல் தலைமை மாற்றம் நடப்பது ஒரு நாட்டின் முக்கியமான ஜனநாயக அடையாளமாகும். எனவே நாட்டின் ஜனாதிபதி மாற்றம் அமைதியாக நடக்க பாதுகாப்பு அமைச்சு சகல வழிகளிலும் உதவவேண்டும். நடந்து முடிந்த தேர்தல் ஒழுங்கு பற்றி நாட்டின் மாநில அரசுகளும், நீதிமன்றங்களும் பதிலழித்துவிட்டன. எனவே, இழுபறிகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கான கூட்டுறவைச் சகலரும் சேர்ந்து வழங்கவேண்டும்,” என்று அந்தப் பகிரங்கக் கடிதத்தில் இரண்டு கட்சியின் மாஜி அமைச்சர்களும் ஒரே குரலில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று ஜோர்ஜியாவில் நடக்கவிருக்கும் இரண்டு செனட்டர்களுக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெல்லுமென்பது அச்சபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு இரண்டு கட்சிகளுக்கும் அவசியம்.
நாளை ஜனவரி 6ம் திகதி வாஷிங்டனில் ஒரு “வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்று பேரணி நடத்தத் டிரம்ப் தனது ஆதரவாளர்களை அழைத்திருக்கிறார். அவரது ரிபப்ளிகன் கட்சியினரில் பலர் டிரம்ப் சொல்வதையெல்லாம் நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வன்முறைக்குத் தூண்டி நாட்டில் குழப்பங்களை உண்டாக்கி அதை அடக்க டிரம்ப் இராணுவ அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவரக்கூடுமென்று பலர் அஞ்சுகிறார்கள்.
சிறையிலிருந்து டிரம்ப்பால் சமீபத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட டிரம்ப்பின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மைக்கல் பிளின் அப்படியொரு இராணுவ அவசரகாலச் சட்டத்தைப் பகிரங்கமாகவே கோரியிருக்கிறார். குழப்பகரமான நாட்டு நிலைமையை உண்டாக்கி, இராணுவத்தினரை உதவிக்கழைப்பதன் மூலம் டிரம்ப் ஜனாதிபதி கதிரையைத் தொடர்ந்தும் பற்றிக்கொள்ள விரும்புகிறாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்