உள்நாட்டில் இயற்கையில் மலசலம் கழித்து அசுத்தமாக்கும் நியூசிலந்துச் சுற்றுலாப்பயணிகள்.
நியூசிலாந்தின் 21 விகிதமான அன்னியச் செலாவணியைத் தரும் துறையான சுற்றுலா, பயணத்துறை, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 5.8 விகிதமாகும். அப்படியான ஒரு அதிமுக்கியமான துறை நாடு கொரோனாப்பரவலைத் தடுக்கத் தனது எல்லைகளை மூடியிருக்கும்போது என்னாகும் என்ற கேள்வி அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாதது மட்டுமன்றி நியூசிலாந்து மக்களும் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குப் பயணிக்க இயலாத நிலை 2020 ஏப்ரல் மாதக் கொரோனாக்கட்டுப்பாடுகள் தொடங்கியது முதல் இன்னும் தொடர்கிறது. பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புக்கள் குறைந்து நிறுவனங்கள் திவாலாகாமலிருப்பதைத் தடுக்க நியூசிலாந்து அரசு “இது உங்கள் நாட்டையும் நீங்கள் பார்க்கவேண்டிய தருணம். உள்நாட்டுக்குள் சுற்றுலா செய்யுங்கள்,” என்று வேண்டிக்கொண்டது.
அரசின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்தும், வெளிநாட்டுப் பயணங்களைச் செய்ய முடியாத நிலையிலும் நியூசிலாந்து மக்கள் தமது நாட்டுக்குள் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், நாடு முழுவதுமுள்ள தங்கும் விடுதிகள், இயற்கைப் பிராந்தியத்திலுள்ள குடிசை வீடுகளெல்லாம் வழக்கத்தை விடவும் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுகிறது. அதேபோலவே நாட்டின் பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களுக்கு வருகை தருபவர்களுடைய எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்திருக்கிறது என்று நாட்டின் சுற்றுலாத்துறை திணைக்களம் அறிவிக்கிறது.
ஆனால், இந்த உள் நாட்டுச் சுற்றுலாப் பிரயாணிகள் அதிகரிப்பு மிகப்பெரும் பிரச்சினையைச் சுற்றுப்புற சூழலுக்கும், சமூகங்களுக்கும் கொடுத்து வருவதாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டுச் சுற்றுலாப்பயணிகளால் தாம் குப்பைகளைக் கண்ட இடங்களிலும் போடுதல், இயற்கையில் வாழும் விலங்குகளுக்குத் தொல்லை கொடுத்தல், கண்ட இடத்திலும் மலம் கழித்தல், நிர்வாணமாகச் சுற்றுதல், அமைதி பேணாமை போன்ற தொல்லைகளைத் தாம் அனுபவிப்பதாக நியூசிலாந்தின் பல பாகங்களிலிருந்தும் புகார்கள் குவிந்து வருவதாக சுற்றுலாத் திணைக்களம் குறைப்பட்டுக் கொள்கிறது.
இதனால் நியூசிலாந்து மக்களுக்கு “பொறுப்பான சுற்றுலா” பற்றிய அறிவைச் சொல்லிக்கொடுக்கவேண்டிய நிலை நியூசிலாந்துக்கு உண்டாகியிருக்கிறது. சுமார் 8 மில்லியன் டொலர்கள் 2020 இல் அப்படியான விளம்பரங்களுக்காகவும் அதற்கேற்ற விதமாகப் பல இயற்கைப் பிராந்தியங்களை மாற்றுவதற்காகவும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. தவிர, பலரும் மலசலகூட வசதியில்லாத தமது சுற்றுலா வண்டிகளில் பயணித்துக் கண்ட நீர் நிலைகளுக்கு அருகே அசிங்கம் செய்வதால் அப்படிப்பட்ட வண்டிகளைப் பாவிப்பதைத் தடுக்கவும், விற்பனையைத் தடுக்கவும் திட்டமிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்