மிதிவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று பிள்ளை பெற்றுக்கொண்ட நியூசிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்.

அரசியலில் பெண்களும் இயங்கலாம் என்பதைச் சமீப வருடங்களில் நிரூபித்து வரும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. கர்ப்பிணியாக இருந்த அந்த நாட்டின் சூழல் ஆர்வலர்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜெண்டர் நவம்பர் 28 ம் திகதி ஞாயிறன்று தனது மிதிவண்டியைத் தானே மிதித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று பிள்ளை பெற்றுக்கொண்டார்.

41 வயதான ஜெண்டர் பிள்ளை பெற்றுக்கொண்டதும் தனது பேஸ்புக்கில், “மிதிவண்டியில் சென்று பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டுமென்று நானொன்றும் திட்டமிடவில்லை. ஆனால், அது நடந்தது. காலை 03.04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் புதிய அங்கத்தவரை வரவேற்றோம்,” என்று குறிப்பிட்டிருந்தார். பிள்ளை பெற ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் வலி ஆரம்பித்தபோதே அவர் மிதிவண்டியில் ஏறிப் புறப்பட்டிருந்தார்.

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் பதவியிலிருக்கும்போது பிள்ளை பெற்றுக்கொண்டு பெற்றோருக்கான விடுமுறையையும் எடுத்துக்கொண்டார். அவர் தனது மூன்று மாதக் கைக்குழந்தையுடன் ஐ.நா-வின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டபோது அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார் என்பதும் சர்வதேசச் செய்தியாக வெளியாகியிருந்தது. 

பாராளுமன்ற உறுப்பினரான ஜெண்டர் அவரது கட்சியின் போக்குவரத்துக் கொள்கைகளைக் கையாள்பவராகும்.

சாள்ஸ் ஜெ. போமன்