பாக்கிஸ்தானுக்குப் போனபிறகும் கிரிக்கெட் போட்டித்தொடரை ரத்து செய்த நியூசிலாந்துக் குழுவினர் நாடு திரும்புகிறார்கள்.

கிரிக்கெட் குழுவினரின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை ஒன்றால் பாக்கிஸ்தானுடனான தமது கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நியூசிலாந்து ரத்து செய்தது. பாக்கிஸ்தானின் கௌரவத்துக்கு மிகவும் இழுக்காகிவிட்ட அந்த நிகழ்ச்சியை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டது பாக்கிஸ்தான்.

2009 ம் ஆண்டு பாக்கிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சிறீலங்கா குழுவினர் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் பாக்கிஸ்தான் தனது நாட்டில் வெளிநாட்டு கிரிக்கெட் குழுவினரை வரவழைத்துப் பாதுகாப்புடன் போட்டிகளை நடாத்தித் திருப்பியனுப்புவதில் வெற்றிபெறவேண்டுமென்று பெரும் முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சிக்குப் பெரும் இழப்பாக முடிந்தது நியூசிலாந்து குழு விளையாடாமலே திரும்பிச் செல்வது.

2009 இல் சிறீலங்கா குழுவினர் பாக்கிஸ்தானின் லாகூரில் தாக்கப்பட்டபோது குழுவின் தலைவர் மகேல ஜயவர்த்தன, உப தலைவர் குமார் சங்கக்காரா உட்பட ஐந்து வீரர்கள் காயப்பட்டார்கள். பாதுகாப்புப் படையினர் ஆறு பேரும் பொது மக்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள். உடனடியாக ரத்து செய்யப்பட்ட அப்போட்டிச் சுற்றின் பின்னர் உடனடியாக சிறீலங்கா வீரர்கள் நாடு திரும்பினார்கள். அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பாக்கிஸ்தானின் இஸ்லாமியத் தீவிரவாதிகள், இந்தியா, விடுதலைப் புலிகள் என்றெல்லாம் பேசப்பட்டாலும் அதுபற்றிய நேர்மையான விசாரணை அறிக்கை இதுவரை பாக்கிஸ்தானால் சமர்ப்பிக்கப்படவில்லை. 

அவ்வருடத்தின் Champions Trophy பாக்கிஸ்தானிடமிருந்து  பறிக்கப்பட்டது. 2011 ம் ஆண்டு உலகக் கோப்பைப் பந்தயங்கள் பாக்கிஸ்தானிலிருந்து அகற்றப்பட்டு சிறீலங்கா, பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்பு இதுவரை தென்னாபிரிக்கா, சிறீலங்கா, ஸிம்பாவ்வே, பங்களாதேஷ் ஆகிய நாட்டுக் குழுகளே பாக்கிஸ்தானில் விளையாட்டுச் சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியிருக்கின்றன. நியூசிலாந்துக் குழுவின் போட்டிகள் ரத்து மீண்டும் பாக்கிஸ்தானுக்கு விளையாட வெளிநாட்டுக் குழுக்கள் வர மறுக்கும் நிலையை ஏற்படுத்துமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சனியன்று இஸ்லாமாபாத்திலிருந்து எமிரேட்ஸ் விமானமொன்றின் மூலம் நியூசிலாந்துக் குழுவினர் வெளியேறினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. நியூசிலாந்துப் பிரதமர் தமது குழுவை அரங்கத்துக்கு வெளியே வைத்துத் தாக்கும் திட்டம் இருந்ததாகக் குறிப்பிட்டாலும் பாக்கிஸ்தான் தமக்கு அப்படியொரு எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *