மத்தியதரைக்கடலின் நடுப்பாகத்தில் படகு உடைந்ததால் 75 அகதிகள் மூழ்கி இறந்தார்கள்.

இவ்வருடத்தில் மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயன்ற அகதிகளின் பெரும் அவல நிகழ்வாக நவம்பர் 17 ம் திகதியன்று லிபியாவின் கரைக்கருகே உடைந்துபோன படகின் நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. கப்பலில் இருந்தவர்களில் 75 பேர் மூழ்கி இறந்ததாக தப்பியவர்கள் மூலம் தெரியவருகிறது.

குறிப்பிட்ட படகில் பாகிஸ்தான், சூடான், நைஜிரியா, கம்பியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்ததாக அவர்கள் தெரிவித்தார்கள். பயணித்த 92 பேரில் உயிர்தப்பிக் கடலில் மிதந்த 15 பேர் அவ்வழியே வந்த மீன்பிடிப் படகொன்றின் மூலம் காப்பாற்றப்பட்டு லிபியாவின் ஸவாரா என்ற நகருக்குக் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

இறந்துபோனவர்களில் 6 பேரின் உடல்கள் மட்டுமே மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவ்வருடத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் அக்கடலில் காணாமல் போயிருப்பதாகத் தெரியவருகிறது.

ஐரோப்பிய நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் சேர்ந்து அக்கடலினூடாக வரும் அகதிகளை வழியில் குறுக்கிட்டு நிறுத்தி ஆரம்பித்த இடத்துக்கே திருப்பியனுப்புவது இவ்வருடத்தில் அதிகமாகியிருக்கிறது. சுமார் 30,000 இதுவரை லிபியாவுக்குத் திருப்பப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 7 -13 ம் திகதிகளில் மட்டும் சுமார் 800 பேர் அக்கடலைக் கடக்கும்போது மறித்துத் திருப்பப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், 2020 ஐ விட அதிகமானவர்கள் இவ்வருடம் அகதிகளாக இத்தாலியக் கடற்கரையில் தஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை 61,000 என்று இத்தாலியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்