சரக்குக்கப்பல் தொடர்பு ஒன்று யாழ்ப்பாணத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாண வர்த்தக அமைப்புக்கும், கொழும்பிலிருக்கும் சரக்குகக் கப்பல் போக்குவரத்து நடத்தும் நிறுவனம் ஒன்றுக்கும் இடையேயான ஒப்பந்தமொன்றின் கனியாக பெப்ரவரி முதலாம் வாரத்திலிருந்து யாழ் – தமிழ்நாடு சரக்குக்கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகவிருக்கிறது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து சுமார் 300 மெட்ரிக் தொன் சரக்குகள் காங்கேசன்துறைக்கு வாராவாரம் கொண்டுவரப்படும்.

தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்படும் சரக்குகளைத் தேக்கிவைப்பதற்கான பண்டகசாலையொன்று இதற்காகத் தயாராக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்து கண்காணிப்புக்களை நடத்தக் கொழும்பு நகரத்துறைமுக அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் காங்கேசன்துறைக்கு வந்திருந்தார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து வரும் கப்பல் திரும்பிச் செல்லும்போது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதிக்காக எடுத்துச்செல்லவேண்டும் என்று யாழ்ப்பாண வர்த்தக அமைப்பின் தலைவர் டி. ஜெயசேகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச் சரக்குப் போக்குவரத்தானது இந்தியாவிலிருந்து பொருட்களைக் கொழும்பு மூலமாகக் கொண்டுவருவதனால் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் அதன் மூலம் சிறீலங்காவின் வடக்குப் பிராந்தியத்தின் விலைகளைக் குறைக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டுக்கும், பலாலி விமான நிலையத்துக்கும் சமீபத்தில் விமானத் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போக்குவரத்தை மேலும் அதிகரிப்பதற்கான தேவை இருப்பதாகவும் பயணிகளின் எண்ணிக்கை காட்டுகிறது. எனவே, விரைவில் யாழ் – தமிழ்நாட்டுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தையும் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் பற்றிப் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.  

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *