பிரேசில் அரசியல் நிலைமை. ஆதரவாளர்களில் 1,500 பேர் கைது, பொல்சனாரோ மருத்துவமனையில்.

ஞாயிறன்று பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பல அரசாங்கத் திணைக்களங்களுக்குள் நுழைந்து நடத்திய வன்முறையின் விளைவாக நாடெங்கும் பதட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும் என்று குரலெழுப்பினார்கள். சில நகரங்களில் பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் தாம் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஆரப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

தலைநகரான பிரசிலியாவில் மத்திய அரசு பாதுகாப்பைக் கையெடுத்திருக்கிறது. அங்கே பொல்சனாரோ ஆதரவாளர்கள் ஏற்படுத்தியிருந்த அரண்களை இராணுவம் தகர்த்து அங்கேயிருந்தவர்களைத் துரத்தியடித்திருக்கிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூகவலைத்தளங்களைப் பாவித்துத் தமது திட்டங்களைப் போட்டமை பற்றிய விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. வெளியாகிய படங்களின் மூலம் பொலீசாரில் ஒரு பகுதியினர் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டும் காணாமலிருந்தமையும், திட்டங்களுக்கு உடந்தையாக இருந்ததும் வெளியாகி நாட்டு மக்களைக் கொதிக்கவைத்திருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி பொல்சனாரோ வன்முறைகளுக்கும், ஜனநாயகத்துக்கு முரணான நடவடிக்கைகளுக்கும் தான் ஆதரவு கொடுக்கவில்லையென்று தெரிவித்திருக்கிறார். முன்னொரு சமயம் தனது வயிற்றில் 2018 இல் பட்ட கத்திக்குத்தால் ஏற்பட்ட உபாதைகளுக்கு அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். புதிய ஜனாதிபதி பதவியேற்க இரண்டு நாடுகளுக்கு முன்னர் அவர் பிரேசிலை விட்டு வெளியேறியதாகத் தெரியவருகிறது. 

பிரேசிலில் பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையைக் கண்டித்த அமெரிக்க அரசியல் தலைவர்கள் ஒரு சாரார் அவரை நாட்டை விட்டு வெளியேற்றும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *