சூடான் மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன்னாள் இராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஒக்டோபர் மாதக் கடைசியில் சூடானில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு அதன் பின்னர் பல வகைகளில் மக்களை ஏமாற்றுவதில் முனைந்திருக்கிறது. ஆனாலும், மக்கள் தளராமல் லட்சக்கணக்கில் கூடி இராணுவம் ஆட்சியை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கோரிப் போராடி வருகிறார்கள். 

சூடானின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் சனிக்கிழமையன்றே கார்ட்டூனை நோக்கிப் பயணித்தார்கள். இராணுவத்தின தலைநகரை நோக்கி வரும் வழிகளைப் பல இடங்களில் மூடி மறிக்க முயற்சிசெய்தும் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு திரண்ட லட்சக்கணக்கானோர் மீது நீரை அடித்தும், அதிர்ச்சிக் குண்டுகளைப் போட்டும் விரட்டியது இராணுவம். சுமார் 123 பேர் காயமடைந்தார்கள்.

தலைநகரான கார்ட்டூனைத் தவிர போர்ட் சூடான், கசானி, மடாலா ஆகிய நகரங்களும் மக்கள் திரண்டு நாட்டின் இராணுவத்தை எதிர்த்துக் கோஷமிட்டார்கள். இராணுவம் நாட்டின் பிரதமரை மீண்டும் பதவியிலிருத்தியதாகக் குறிப்பிட்டாலும் அது வெறும் கண் துடைப்பே என்று மக்களும், தொழில் சங்கங்களும் குறிப்பிடுகின்றன. எனவே, 45 பேர் ஊர்வலங்களில் கொல்லப்பட்ட பின்னரும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்