ஆட்சி அதிகாரங்களை அரசியல் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சூடானில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் சூடானில் ஆட்சியிலிருந்த குழுவினரில் பலரைக் கைதுசெய்துவிட்டு அதிகாரங்களைத் தன் கையில் எடுத்துக்கொண்டது நாட்டின் இராணுவம். சர்வாதிகாரி ஒமார் பஷீரை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த மக்களின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட அரசின் பிரதமரான அப்துல்லா ஹம்டொக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இராணுவத்தின் உயர் தளபதி அப்துல் பத்தா அல் – புர்ஹான் அரசியல்வாதிகள் ஒழுங்காக நாட்டை நடத்தாததால் தாம் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவித்தார்.

தற்காலிகமான சூடானில் ஏற்படுத்தப்பட்டிருந்த அரசில் அச்சமயம் இராணுவத்துக்குக் கணிசமான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வதிகாரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு அரசியல் தலைமையின் கீழ் நாட்டைக் கொண்டுவரும் திட்டமும், அதையடுத்துப் ஒரு பொதுத் தேர்தலை நடத்தவும் சர்வதேச உதவியுடன் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. 

1956 முதல் நாட்டில் பெரும் அதிகாரத்துடனிருந்த இராணுவம் தமது அதிகாரங்கள் படிப்படியாகக் குறைவதை ஏற்க முடியாததாலேயே அப்துல் பத்தா அல் – புர்ஹான் தலைமையில் நாட்டைக் கைப்பற்றியதாகக் குறிப்பிடப்பட்டது. அதையெதிர்த்து உலக நாடுகள் பலவும் இராணுவத்தைக் கண்டித்து உடனடியாக அதிகாரத்தைப் பிரதமரிடம் கையளிக்கும்படி நிர்ப்பந்தித்தன.

பெருமளவில் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கியிருந்தது சூடான். அமெரிக்கா, உலக வங்கி ஆகியவை தாம் சூடானுக்குக் கொடுப்பதாக உறுதி கூறியிருந்த பல நூறு மில்லியன் டொலர்களை தருவதில்லை என்று அறிவித்தன. அவைகளைச் சூடானுக்குக் கொடுப்பதாயின் இராணுவம் உடனடியாக அரசியல் தலைவர்களை விடுதலை செய்து மீண்டும் அவர்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டுமென்று ஒரே குரலில்

 வலியுறுத்தப்பட்டது.

அதையடுத்து இராணுவத் தலைமையும், பிரதமர் ஹம்டொக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்களிடையேயான அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் விரைவில் சூடானின் ஆட்சி பற்றிய தீர்மானமொன்று வெளியிடப்படுமென்றும் அப்பேச்சுவார்த்தைகளை ஒழுங்குசெய்த ஐ.நா-வின் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்