எத்தியோப்பிய அரசு தேசிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருக்கிறது.

திக்ராய் விடுதலை இயக்கத்தினர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு, நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டு எத்தியோப்பிய அரசு செவ்வாயன்று நாடெங்கும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்திருக்கிறது. 

“திகிராய் இயக்கத்தினரின் [TPLF] தீவிரவாதச் செயல்களிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றவே அரசு அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருக்கிறது,” என்று எத்தியோப்பிய அரசின் வானொலி அறிவித்தது. 

எத்தியோப்பியாவின் சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராயில் ஆட்சியிலிருப்பவர்கள் மத்திய அரசு தங்களை மாற்றாந்தாய் நோக்கில் நடாத்துவதாகக் குறிப்பிட்டு அரசை எதிர்த்து வருகிறார்கள். அதனால், அவர்களுடைய மாநிலத்தையே சுற்றி வளைத்து எத்தியோப்பியாவின் இராணுவம் தாக்கிப் போரிட்டது. அப்போர் முடிவடைந்ததாக எத்தியோப்பிய அரசு அறிவித்திருந்தது.

சமீப நாட்களில் தலைநகரான அடிஸ் அபாபாவுக்குச் சுமார் 400 கி.மீ தூரத்திலிருக்கும் முக்கிய நகரங்களிரண்டை திகிராய் விடுதலை இயக்கத்தினர் தாக்கிக் கைப்பற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர்கள் ஏற்கனவே தமது மாநிலத்தின் பெரும் பாகத்தையும் கையகப்படுத்தியிருப்பதாகவும் தெரிகிறது. நாட்டை அவர்கள் முழுவதுமாகக் கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் அபிய் அஹமத் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் தலைநகரை நோக்கி நகரும் அசுமாத்தம் ஏதுமில்லையென்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.

எத்தியோப்பிய அரசு சமீப காலமாக நாட்டில் சுதந்திர ஊடகங்களின் வாயை அடைத்து, நாட்டின் பெரும்பாகத்தினுள் வெளியிலிருந்து எவரும் வராதபடி கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. திகிராய் பிராந்தியத்தில் எத்தியோப்பிய அரச இராணுவம் மனித குலத்துக்கெதிரான படு மோசமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா-குற்றஞ்சாட்டியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்