காபுல் நகரின் இராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர்.

செவ்வாயன்று ஆப்கானிஸ்தானின் தலை நகரான காபுலில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதையடுத்து மருத்துவமனையை துப்பாக்கியேந்தியவர்கள் சிலரும் தாக்கினர். இதுவரை 25 பேர் இறந்ததாகவும் 50 க்கும் அதிகமானவர்கள் காயப்பட்டதாகவும் தலிபான் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

சுமார் 400 நோயாளிகள் தங்கக்கூடிய அந்த மருத்துவமனை வாசலில் முதலாவது தற்கொலைக்குண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவனால் வெடிக்கப்பட்டது. சில நூறு மீற்றர்கள் தள்ளி மேலுமொருவன் வெடித்தான். அதையடுத்துத் துப்பாக்கிகளுடன் மருத்துவமனைக்குள் ஒவ்வொரு அறையாக நுழைந்து தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளினார்கள்.  ஐ.எஸ் – தீவிரவாதிகள் மருத்துவமனைத் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைத் தாக்குதலைத் தலிபான்களின் இராணுவத்தினர் எதிர்த்துப் போரிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றதாகத் தலிபான்கள் குறிப்பிடுகிறார்கள். அச்சமயத்தில் தலிபான்களின் அதிரடிப்படையினரின் தலைவர்களில் ஒருவரான ஹம்துல்லா மொக்லீஸ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

 செவ்வாயன்று தாக்கப்பட்ட அதே மருத்துவமனையை நாலு வருடங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அங்கே வேலைசெய்பவர்கள் பலரைச் சுட்டுத்தள்ளினார்கள். சுமார் 30 பேர் அத்தாக்குதலில் இறந்ததாகத் தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்