“செவ்வாயன்று முதல் எனது நாட்டின் படைகளை நானே முன்னின்று திட்டமிட்டு நகர்த்துவேன்!” அபிய் அஹமத்.

எத்தியோப்பியத் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 220 கி.மீ தூரத்திலிருக்கும் நகரொன்றையும் கைப்பற்றி விட்டுத் தலை நகரை  நோக்கித் திகிராய் விடுதலை இயக்கத்தினரும் அவர்களுடைய கூட்டணிப் படைகளும் நகர்வதை ஒட்டியே திங்களன்று நாட்டின் பிரதமர் அபிய் அஹமத் நாட்டு மக்களை ஒன்றுபட்டுப் போருக்குத் தயாரகும்படி அறைகூவியிருக்கிறார் என்று கருதப்படுகிறது.

அமைதி நடவடிக்கைகளுக்காக நோபலின் பரிசைப் பெற்ற அபிய் அஹமதின் நடவடிக்கைகள் ஒரு வருடத்துக்கும் மேலாகவே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

“எத்தியோப்பியாவின் பிள்ளைகள் என்று எதிர்காலத்தில் சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம்பெறவேண்டுமானால் ஒன்றுதிரண்டு வாருங்கள். போர்முனையில் என்னுடன் சேர்ந்து எதிரிகளைச் சந்திப்போம்,” என்று குறிப்பிட்டிருக்கும் அபிய் அஹமத் தான் எங்கே இருந்து தனது இராணுவத்தை ஒன்றுபடுத்துவேன் என்பது பற்றி எவ்வித விபரங்களையும் தெரிவிக்கவில்லை. அவரது காரியதரிசியை அணுகிய பத்திரிகையாளர்களுக்கும் விபரங்கள் கொடுக்கப்படவில்லை.

தமது மாநிலத்தின் மீதும் மக்கள் மீதும் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நடாத்தப்பட்டுவரும் கடுமையான தடைகள், கைதுகள் நிறுத்தப்படவெண்டும், அபிய் அஹமத் பதவி விலகவேண்டும் போன்றவை திகிராய் விடுதலைப் போராளிகள் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளாகும்.

நிலைமை சமீப வாரங்களில் மோசமடைவதால் ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் நாட்டு அரசுகளும் எத்தியோப்பியாவில் வாழும் தமது குடிமக்களை, அகப்படும் முதலாவது விமானத்தில் நாடு திரும்பும்படி அறிவுறுத்தியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்