மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது பலாலி – சென்னை விமான சேவைகள்.

கொரோனாத்தொற்றுக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பலாலி விமான சேவைகள் டிசம்பர் 12 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அலையன்ஸ் விமான நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்த அந்த விமானச் சேவையானது 2020 மார்ச் மாதம் முதல் விமான நிலையம் மூடப்பட்டதால் நிறுத்தப்பட்டது. 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கும் இலங்கையின் தமிழர்கள் வாழும் பிராந்தியமான வட இலங்கைக்கும் இடையே ஒரே விதமான கலாச்சாரம், மொழி ஆகியவைகளின் தொடர்பு இருப்பதால் அவ்விரு பிராந்தியங்களுக்கும் இடையேயான போக்குவரத்து மிகவும் விரும்பப்படுகிறது. டிசம்பர் 12 ம் திகதியன்று முதல்  அலையன்ஸ் விமான நிறுவனத்தினர் வாரத்துக்கு நான்கு சேவைகளை அவ்வழியில் நடத்துவார்கள். அந்த விமான நிறுவனம் முன்பு எயார் இந்தியாவின் கீழிருந்தது. மத்திய அரசின் உடமையாக இருந்த எயார் இந்தியா சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் டாட்டா நிறுவனத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. தற்போது இந்திய அரசின் மான்யம் பெறும் பிராந்திய விமான கூட்டுறவு அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

பலாலி – சென்னை விமானச்சேவைகள் 2019 இல் ஆரம்பிக்கப்பட முன்னர் வட இலங்கைவாழ் மக்கள் கொழும்புக்கு ரயில், நெடுஞ்சாலை மூலம் பல மணிகள் பயணம் செய்து கொழும்புக்கு வந்தே சென்னைக்குப் பயணம் செய்ய முடிந்தது. மீண்டும் அந்தச் சேவை ஆரம்பிக்கப்படுவது இரண்டு பிராந்தியங்களின் வர்த்தகம், சுற்றுலா போன்றவற்றுக்கும் மிகவும் ஆதரவாக இருக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *