இலங்கைத் தமிழ் விஞ்ஞானியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதில்லை என்று தன் முடிவை மாற்றியது ஐக்கிய ராச்சியம்.

கௌரவத்துக்குரிய Commonwealth Rutherford fellowship மூலம் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்துவந்த நடராஜா முகுந்தன் தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்காகத் தொடர்ந்தும் ஐக்கிய ராச்சியத்தில் வாழலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்துடன் சிறீலங்காவுக்குத் திரும்பவேண்டுமென்று அவருக்குக் கொடுத்திருந்த தீர்வு மாற்றப்பட்டிருக்கிறது.

சூரியக்கதிர்கள் மூலம் எரிசக்தி பெறும் கலங்களின் செயற்பாட்டைச் சீர்செய்து பலனை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் முகுந்தன். 47 வயதான அவர் தனது மனைவியுடனும் 13, 9, 5 வயதான மூன்று பிள்ளைகளுடனும் அங்கே 2018 முதல் வாழ்ந்து வருகிறார். அவரது மனைவியும் அங்கே பணியொன்றைச் செய்துவருகிறார்.

நவம்பர் 2019 இல் தனது தாயாரைப் பார்ப்பதற்காக நாடு திரும்பிய அவரை சிறீலங்கா அரசு கைது செய்திருந்தது. அங்கிருந்து எப்படியோ தப்பி மீண்டும் ஐக்கிய ராச்சியத்துக்கு வந்த அவர் அங்கே தான் சிறீலங்காவுக்குத் திரும்பினால் தமிழர் என்பதா, அரசியல் நோக்கத்துடன் கைதுசெய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டு அகதியாகக் குடும்பத்தினருடன் தங்க அனுமதி கேட்டார். அவருடைய ஆராய்ச்சிக்கான விசா 2020 பெப்ரவரியுடன் முடிவடைந்திருந்தது.

முகுந்தனின் அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டது. கார்டியன் பத்திரிகை அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி ஐக்கிய ராச்சியத்தின் குடிவரவுத் திணைக்களத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது. அதையடுத்து பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், “அது ஒரு தவறான முடிவு, அவருடைய பிரத்தியேக ஆராய்ச்சித் துறையின் அறிவு ஐக்கிய ராச்சியத்தின் விஞ்ஞானத்துறைக்கு அனுகூலமானது,” என்று குடிவரவுத் திணைக்களத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். 

அதையடுத்து தனது முடிவிலிருந்து ஒரேயடியாக மாறி முகுந்தன் குடும்பத்தினரை ஐக்கிய ராச்சியத்தில் தங்கவும், அவரைத் தனது ஆராய்ச்சியைத் தொடரவும் அனுமதித்திருக்கிறது நாட்டின் குடிவரவுத் திணைக்களம்.

“ஐக்கிய ராச்சியத்தின் இந்த மனமாற்றம் சிறீலங்காவில் தமிழர்கள் மீதான அரசியல் ஒடுக்குமுறை தொடர்ந்து நடப்பதை அங்கீகரிக்கும் ஒரு முடிவாகும்,” என்று நடராஜா முகுந்தனின் வழக்கறிஞர் நாகா கந்தையா தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்