முதல் அச்சுக்கூடம் கண்ட ஊர் புன்னைக் காயல்.

தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்ட இடம் புன்னைக் காயல் என UNIVERSAL ACHIEVERS நிறுவனம் அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைப் பாதிரியார் ஹென்றி ஹென்றிக்ஸ் 1578 இல் கொல்லத்தில் 16 பக்கங்கள் கொண்ட 'தம்பிரான் வணக்கம்' நூலை அச்சிட்டார். இதுவே தமிழில் அச்சான முதல்நூல். 1579 இல் கொச்சியில் 'கிரிசித்தியானி வணக்கமும்', 1580 இல் 'கொம்பெசியோனாரு' நூலும் இவராலேயே அச்சிடப்பெற்றன. 1586 இல் அண்டிரிக் அடிகளாரால் தமிழக எல்லைக்குள் முதன் முதலில் புன்னைக் காயலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. இந்த அச்சுக்கூடத்தில் "FLOS SANCTORUM" (அடியார் வரலாறு) என்ற 670 பக்கங்கள் கொண்ட நூல் அச்சிடப்பட்டது. தமிழ் மொழியில் நான்கு நூல்களை அச்சிட்ட அண்டிரிக் அடிகளாரை 'அச்சுக்கலையின் தந்தை' என்று அழைக்கின்றனர். 1714 இல் சீகன்பால்கு ஐயரால் தரங்கப்பாடியில் தமிழ் மொழியில் விவிலியம் அச்சிடப்பட்டது. அங்கு அவர் காகிதப் பட்டறையையும் நிறுவினார். தமிழகத்தில் முதல் காகிதப் பட்டறை நிறுவப்பட்ட இடம் தரங்கம்பாடியே. மாறாக, தமிழ் முதன் முதலில் அச்சேறியது தரங்கம்பாடி எனத் தவறான தகவல் பாடநூல்களில் பதிவாகி உள்ளது.

தமிழ் மொழி தமிழக எல்லைக்கு அப்பால் முதலில் 1578இல் கேரளத்திலும், 1586 இல் தமிழக எல்லைக்குள் புன்னைக் காயலிலும் முதன்முதலில் அச்சேறியது என்பதை அரசு ஆவணங்களில் பதிவு செய்திட புன்னைக் காயல் ஊர்க் கமிட்டி, ஊரின் பற்றாளர்கள், எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்து முயற்சித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக, உலக சாதனைகளைப் பதிவு செய்துவரும்“UNIVERSAL ACHIEVERS “BOOK OF RECORDS இல் பதிவு செய்யும்படி தங்களிடம் உள்ள சான்றுகளை ஒப்படைத்து புன்னைக் காயல் ஊர்க் கமிட்டி விண்ணப்பித்தது. இதனை ஆய்வு செய்த உலக சாதனைப் பதிவு நிறுவனம், உலகில் தமிழுக்கென்று முதன்முதலில் 1586 இல் அச்சுக்கூடம் புன்னைக் காயலில் இருந்ததை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்நிகழ்ச்சி மதுரையில் 27.11.2021 அன்று மாலையில் பப்பிஸ் ஹோட்டலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அருள்முனைவர் அமுதன் அடிகள், புன்னைக் காயல் ஊர்க் கமிட்டி தலைவர் திரு.அமல்சன், துறைமுகக் கமிட்டி தலைவர் திரு. நாதன், முனைவர் திரு. பெவிஸ்டர், எழுத்தாளர் நெய்தல் அண்டோ மற்றும் ஊர் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஊருக்கான சான்றிதழ், கேடயத்தைப் பெற்றனர். உலக சாதனை நிறுவனம் புன்னைக் காயலில் அச்சுக்கூடம் இருந்ததை அங்கீகரித்துள்ள நிலையில், இனி தமிழகப் பாடநூல்களில் பிழைகள் திருத்தப்பட வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.

எழுதுவது :தமிழ்வானம் சுரேஸ்