டிரம்ப்பின் முன்னாள் “கோட்பாட்டு இயக்குனர்” ஸ்டீவ் பன்னனை யூடியூப் தனது தளத்திலிருந்து தூக்கியெறிந்தது.
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாகும் திட்டங்களின் பின்னணியிலிருந்து கோட்பாட்டு ஆலோசனைகள் வழங்கியவர்களில் முக்கியமான ஒருவராகக் குறிப்பிடப்படுபவர் ஸ்டீவ் பன்னன் இவர் டிரம்ப் ஜனாதிபதியான பின் முதல் ஏழு மாதங்களிலும் அவருக்கு நெருக்கமான வெள்ளை மாளிகை ஆலோசகராக இருந்தவர். பன்னனின் பின்னணி ஒரு கடும்போக்கான வலதுசாரி என்பதாகும்.
டிரம்ப்பின் பெயரைப் பாவித்துத் தனக்குச் சொத்துக்களைத் திரட்டிக் கொண்டமை, மெக்ஸிகோவுடனான எல்லையில் மதில் கட்டும் திட்டத்தை அறிவித்துப் பணம் சேர்த்துச் சுருட்டிக் கொண்டவை போன்ற குற்றங்கள் பன்னன் மீது எழ ஆரம்பிக்கவே டிரம்ப் பன்னொனைத் தனது நெருக்கமானவர்கள் பட்டியலிலிருந்து தூரத்தள்ளிவிட்டார். அதன் பின் விசாரணைகள் நடாத்தப்பட்டு பொருளாதார ஏமாற்றுக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர் ஸ்டீவ் பன்னன்.
ஊடகத்திட்டங்களிலும் பழக்கமுள்ள பன்னன் அதன் பின்னரும் தொடர்ந்து தனது வலதுசாரிக் கொள்கைகளுக்கான ஊடகங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஐரோப்பிய வலதுசாரிகளுடனும் இணைந்துகொண்ட பன்னன் தமது கோட்பாடுகளை பரப்புவதற்காக “போர் அறை” (War room) என்ற யூடியூப் ஊடகமொன்றை இயக்கி வந்தார்.
அந்த ஊடகத்தின் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய வலதுசாரிக் குழுக்களுக்ளை ஒன்று சேர்ந்து அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிராகச் செயற்படும் உதவிகளைச் செய்து வந்தார். பல ஐரோப்பிய நாடுகளில் சமீப வருடங்களில் நடந்த வலதுசாரிக் குழுக்களின் சட்டத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்குப் பின்னணியிலிருப்பதாக இவரது பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது.
அத்துடன் அரசாங்கங்கள் அறிவிக்கும் பல திட்டங்களைப் பற்றி “அவை மக்கள் மீது ஆக்கிரமித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் இருட்டான சக்திகளால் இயக்கப்படுகின்றன,” என்ற கருத்தைப் பரப்புவதிலும் அவரது ஊடகங்கள் ஈடுப்பட்டு வந்தன. கொரோனாப் பரவல் என்பதும் அதேபோன்ற ஒரு ஏமாற்றுச் செயலே என்றும், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் பின்னணியிலிருக்கும் இருட்டான சக்திகளால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூட இவர் குறிப்பிட்டுச் சமீபத்தில் பல தடவைகள் டிரம்ப் போலவே தேர்தல் முடிவுகளை “ஏமாற்றல்” என்ற கருத்தைத் தனது யூடியூப் ஊடகம் மூலம் பரப்பி வந்தார். அத்துடன் அமெரிக்க தொற்றுநோய்ப்பரவலைத் தடுக்கும் உயரதிகாரி அண்டனி பௌச்சி, எப் பி ஐ இயக்குனர் கிரிஸ்தோபர் விரே ஆகியவர்களின் கழுத்தை வெட்டி வெள்ளை மாளிகை வாசலில் ஈட்டியில் குத்தி வைக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனால் யூடியூப் இவரை அவ்வப்போது குறுகிய காலத்துக்குத் தமது தளத்திலிருந்து அகற்றி வந்தது. ஆனால், தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் வாஷிங்டனில் நடந்த பாராளுமன்ற அமளிதுமளியில் ஈடுபட்டவர்களை ஊக்குவித்ததால் யுடியூப் ஸ்டிவ் பன்னனின் போர் அறை, மற்றும் இன்னொரு இணையத்தையும் மூடிவிட்டு அவரை அகற்றியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்