தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், சான்றிதழ்களுடன் சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்பது கிரீஸ் பிரேரிக்கிறது.
தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒன்றித்துத் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோ மித்ஸோதாக்கிஸ் முன்மொழிந்திருக்கிறார்.
சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து நின்றிருப்பதால் பெரும் பாதிப்பை அடைந்திருக்கும் நாடுகளிலொன்று கிரீஸ். நாட்டின் சுற்றுலாத்துறையையும், போக்குவரத்துத் துறையையும் முடிந்தளவு வேகமாக மீண்டும் கட்டியெழுப்பும் எண்ணத்தில் கிரீஸ் பிரதமர் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே போன்ற கருத்துக்கள் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்தும் வர ஆரம்பித்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து எல்லோரும் ஒன்றுபட்டால் வரவிருக்கும் கோடை விடுமுறைக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் தமது சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படும் அதே சமயத்தில் போடாதவர்கள் எவரையும் தடுப்பு மருந்து போடும்படி நாம் நிர்ப்பந்திக்க மாட்டோம்,” என்கிறார் கிரீஸ் பிரதமர்.
அவரது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களும் சிலரிடமிருந்து எழாமலில்லை. தடுப்பு மருந்துகள் போட்டவர்கள் எவரெவர் என்ற தனிப்பட்ட மனிதர்களின் விபரங்களைச் சகல நாடுகளுக்கும் வெளிப்படுத்துவது மனிதரின் சுய நடவடிக்கைகளில் குறுக்கிடும் விடயம். தடுப்பு மருந்துகளைப் பெற்றவர்கள் சுதந்திரமாகப் பயணிக்கும் நிலைமை வருமானால் அது மனிதர்களை வெவ்வேறு மட்டத்தில் பிரிக்கும் நடப்பு என்று சிலரும் விமர்சிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்