துருக்கியினுடனான தனது எல்லையில் கிரீஸ் சத்தமுண்டாக்கும் பீரங்கிகளைப் பாவிப்பது தவறென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் நிலவிய சமயத்தில் துருக்கியிலிருந்து தனது எல்லைக்குள் வரும் தஞ்சம் கோருகிறவர்களைத் தடுப்பதற்கான உயரமான மதில்களை எழுப்புவதில் கிரீஸ் ஈடுபட்டிருந்தது. அத்துடன் அந்த எல்லையில் கிரீஸ் எல்லைக் காவலர்கள் ஜெட் இயந்திரம் போன்ற அளவுக்குச் சத்தமுண்டாக்கும் [sound cannon] சிறிய கருவிகளைப் பாவித்து அகதிகளை விரட்டுவதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. 

அதுபற்றி ஐரோப்பிய ஒன்றியம் விசனமடைந்து கிரீஸிடம் விபரங்களைக் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை மனித உரிமைகளில் வெளியிலிருந்து வரும் ஒருவர் அகதியாக அனுமதி கேட்பதும் அடங்கும். ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை எப்படிப் பாதுகாப்பது என்பது அவர்களுடைய விருப்பம் என்பது ஒரு பக்கமிருக்க அவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறலாகாது. எனவே தஞ்சம் கோரி வருபவர்களை எந்தெந்த முறையில் எதிர்கொள்வது என்பது மனித உரிமைகளை மீறாத வகையில் இருக்கவேண்டுமென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

2015 – 16 ம் ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளினூடாக நுழைந்த மில்லியன் கணக்கான அகதிகளை எதிர்கொள்வதால் ஏற்பட்ட சிக்கல்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே தொடர்ந்தும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. தமது எல்லைகளைக் காப்பதற்காக அதன்பின்னர் சுமார் 4 பில்லியன் டொலர்களைப்  பாதுகாப்பு உபகரண ஆராய்ச்சிகளுக்காக ஒன்றியம் செலவிட்டிருக்கிறது. 

தனது எல்லைகளை மூடிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் செய்யும் அதே சமயம் எல்லைக்கு அடுத்த பக்கமிருக்கும் துருக்கி, வட ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுடைய எல்லைகளைப் பாதுகாத்து அதன்மூலம் அவர்கள் ஐரோப்பாவுக்குள் எவரையும் உட்புகவிடாமல் அடைப்பதற்கும் உதவிவருகிறது. 

கிரீஸ் – துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையேயான எல்லை ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய எல்லைகளில் ஒன்றாகும். சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து துருக்கியினுள் நுழைந்து அங்கிருந்து கிரீஸுக்குள் வருபவர்கள் மிகப் பெரும்பாலானோராகும். அதே சமயம் கிரீஸுடனான தனது பகையினால் துருக்கி அரசியல் மோதலுக்காகவும் கிரீஸுக்குள் நுழைபவர்களுக்கு அவ்வப்போது உதவுவதாகக் குற்றச்சாட்டுக்கள் உண்டு.

எனவே கிரீஸ் தனது பங்குக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கண்காணிப்பு உபகரணங்களைப் பரீட்சிப்பவர்களுக்கு கிரீஸ் எல்லை ஒரு தங்கச் சுரங்கமாகியிருக்கிறது. சுமார் பத்துக்கும் அதிகமான உபகரண அமைப்புக்கள் கிரீஸ் – துருக்கி எல்லையில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரம் உயரமான மதிலையும் நீண்ட தூரத்துக்கு எழுப்பியிருக்கிறது கிரீஸ். 

பயங்கர ஊளையிடும் சத்தமுண்டாக்கும் உபகரணமும் கிரீஸின் எல்லைப்பாதுகாப்பில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வருட இறுதியில் மேலும் கண்காணிப்புக்களைப் பலப்படுத்தவிருப்பதாக கிரீஸ் குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *