“தடுப்பு மருந்து போட்டிருந்தாலும், இல்லையென்றாலும் பிரிட்டர்களை கிரீஸ் சுற்றுலாவுக்கு வரவேற்கிறது!”

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருந்தொற்று நிலைமை, நடவடிக்கைகள் பற்றிப் பேசத் தொலைத் தொடர்பு மூலம் சந்தித்த மாநாட்டில் கிரீஸின் சுற்றுலா அமைச்சர்  ஹரி தியோசாரிஸ் பிரிட்டர்கள் எல்லோரையும் தனது நாட்டில் சுற்றுலாவுக்கு வரவேற்றார்.

18 மில்லியன் குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஒன்றையாவது கொடுத்துவிட்ட பிரிட்டன் இதுவரை வரும் கோடைகாலத்தில் நாட்டு மக்களைச் சுற்றுலாவுக்குப் போக அனுமதிப்பதா என்று தீர்மானிக்கவில்லை. கிரீஸ் ஏற்கனவே இஸ்ராயேல் மக்களை சுற்றுலாவுக்கு அனுமதிப்பதற்கான ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறது.

கிரீஸின் 20 விகிதமான பொருளாதாரம் சுற்றுலாவில் தங்கியிருக்கிறது. நாட்டின் ஐந்தில் ஒரு தொழிலாளி சுற்றுலா சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கிறார். 18 பில்லியன் எவ்ரோக்களைக் கொடுக்கும் ஒரு வருடச் சுற்றுலாக்காலம், கடந்த வருடக் கொரோனாக் கட்டுப்பாடுகளால் பாழாகியதால் சுமார் 14 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

பிரிட்டர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லையெனினும் சுற்றுலாவுக்கு வரலாம் என்று குறிப்பிடும் கிரீஸ் அவர்களில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை, கொவிட் 19 தொற்றியிருப்பதாக நிரூபிக்கும் சான்றிதழும் காட்டத் தேவையில்லை என்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *