பாகிஸ்தானில் ரயில்களின் இரட்டை விபத்தில் இறந்தவர்கள் தொகை 65, மேலும் அதிகரிக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

திங்களன்று பாகிஸ்தான் ரயில்கள் இரண்டு விபத்துக்களுக்கு உள்ளாகின. ரேத்தி, டஹார்க்கி ஆகிய ரயில் நிலையங்களினிடையே இந்த விபத்து நடந்தது. மிலத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் அவ்விடத்தில் ஏதோ காரணத்தால் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருந்தது. அவ்வழியே வந்த சர் சையது எக்ஸ்பிரஸ் இரண்டாவது விபத்தாக, பாதை விலகியிருந்த எட்டுப் பெட்டிகள் மீது மோதியது.

ஏற்கனவே பாதை விலகியிருந்த பெட்டிகளுக்குள் மாட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது மேலுமொரு ரயில் மோதியதால் அங்கே திங்களன்று முழுவது மீட்புப் பணிகள் நடந்தும்கூடத் தொடர்ந்தும் பலர் பெட்டிகளுக்குக் கீழே மாட்டியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. 150 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் 30 என்று அறிவிக்கப்பட்டிருந்த இறந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாயன்று 55 ஆக அதிகரித்திருக்கிறது.

விபத்து நடந்த இடத்துக்குப் பக்கத்தில் வாழ்ந்த விவசாயிகள் வேகமாக அங்கே வந்து காயப்பட்டவர்கள் பலரை அகற்றியதுடன், இறந்த உடல்கள் பலவற்றை ஒதுக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் மீட்புப் படையினர், இராணுவம், காட்டுக் காவலாளிகள் ஆகியோர் வந்து உதவிகள், மீட்புப் பணிகள் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. அந்த ரயில்களொன்றுக்குள் பஞ்சாப்பைச் சேர்ந்த திருமணத்துக்குப் பின்னர் பயணமான ஒரு கூட்டத்தினரும் அகப்பட்டிருந்ததாகக் கிராமவாசிகள் தெரிவித்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 60 க்கும் அதிகம் என்று அவர்கள் குறிப்பிட்டாலும் அரசின் உத்தியோகபூர்வமான எண்ணிக்கை 65 என்கிறது.

இறந்துபோன ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பாகிஸ்தான் ரயில்வே நிறுவனத்தின் வழக்கம்போல 1,500,000 ரூபாய்களும், காயமடைந்தவர்களுக்கு 50,000 முதல் 300,000 ரூபாய்கள் வரை நஷ்ட ஈடாகக் கொடுக்கப்படும். குறிப்பிட்ட ரயில்களிரண்டிலும் 1,388 பேர் பயணித்திருப்பதாகத் தெரிகிறது. 

பாகிஸ்தானில் ரயில் விபத்துக்கள் நடப்பது வழக்கம். 1990 இல் ஒரு துரித ரயில், பொதிகள் சுமக்கும் ரயிலொன்றின் மீது மோதியதில் 210 பேர் இறந்திருக்கிறார்கள். அதுவே நாட்டின் சரித்திரத்தில் அதிக இறப்புக்களைக் கொண்ட விபத்தாகும்.

2005 இல் நடந்த இன்னொரு விபத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு ரயிலின் மீது பயணிகள் நிறைந்த இன்னொரு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அதையடுத்து மூன்றாவதாக அந்த நிலையத்துக்கு வந்த இன்னொரு ரயில் ஏற்கனவே மோதியிருந்த இரண்டு ரயில்களின் மீது மோதியது. அவ்விபத்தில் இறந்தவர்கள் தொகை 130 என்று அறிவிக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *