பதவியிழக்க முன்னர் தனது 13 வது மரண தண்டனையையும் நிறைவேற்றினார் டிரம்ப்.
1996 இல் நடந்த மூன்று இளம் பெண்களின் கொலைக்கான குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்ட டஸ்டின் ஹக்ஸ் சனியன்று இந்தியானாவில் நஞ்சு ஊசி கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். டிரம்ப் பதவி விலகமுதல் நிறைவேற்றப்படும் கடைசி மரண தண்டனை இதுவாகும்.
1890 களின் இறுதி வருடங்களில் ஜனாதிபதியாக இருந்த குரோவர் கிளிவ்லண்டின் காலத்துக்குப் பின்னர் முதல் முதலாக ஒரு வருடத்தில் இரட்டை இலக்கத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட காலமும், ஜனாதிபதிப் பதவி மாற்றக்காலத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது ஜனாதிபதி டிரம்ப்பின் காலத்திலாகும்.
டிரம்ப்பின் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 56 வருடங்களில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். இதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது சுமார் 25 விகிதத்தால் குறைந்திருக்கிறது. மிச்சமிருக்கும் சுமார் 50 பேரின் மரண தண்டனை வரவிருக்கும் காலத்தில் அனேகமாக நிறைவேறப்படாது என்றே கருதப்படுகிறது. ஜோ பைடன் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
டஸ்டினும் வியாழனன்று மரணத்துக்கான ஊசி பெற்ற கோரி ஜோன்சனும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள். அதைக் காரணம் காட்டி அவர்களுடைய சுவாசத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுமென்பதால் நஞ்சு ஊசி கொடுப்பதைத் தள்ளிவைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது. அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சில நாட்களுக்கு முன்னர் மரண தண்டனைக்காகக் காத்திருந்த ஒரேயொரு பெண்ணான லிசா மொண்ட்கொமெரிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வில்லி ஹெய்ன்ஸ் என்ற நண்பனுடன் டஸ்டின் மூன்று இளம் பெண்களைக் கடத்திச் சென்று ஒரு காட்டுப்பகுதியில் கொலை செய்தது அவ்விருவர் மீதும் சாட்டப்பட்ட குற்றமாகும். தான் குற்றவாளி என்று ஒப்புக்கொண்ட வில்லி ஹெய்ன்ஸ் தனது கையில் துப்பாக்கியைத் தந்து அந்தப் பெண்களைக் கொல்லும்படு உத்தரவிட்டது டஸ்டின் தான் என்று குறிப்பிட்டு ஆயுள் தண்டனை பெற்றான். தான் குற்றவாளியென்று இறக்கமுன்னரும் குறிப்பிட்ட டஸ்டினுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்