தனது கடைசி வேலை நாளில் டொனால்ட் டிரம்ப் நாட்டுக்குச் சொல்லப்போகும் செய்தி பற்றி எதிர்பார்ப்பு!
ஜனவரி 19 ம் திகதி செவ்வாயன்று தனது நாலு வருடப் பதவிக்காலத்தின் கடைசி நாளன்று டொனால்ட் டிரம்ப் நாட்டுக்குக் கொடுக்கவிருக்கும் செய்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ஊகங்கள் பல பக்கங்களிலிருந்தும் எழுகின்றன.
தனது கடைசி நாட்களில் பெரும்பாலும் மௌனமாகவே இருந்து வருகிறார், இதுவரை தினசரி அடிக்கடி ஏதாவது கருத்துக்களைச் சொல்லிவந்திருக்கும் டிரம்ப். சமூகவலைத்தளங்களில் டிரம்ப் தடை செய்யப்பட்டிருக்கிறார், செய்தியாளர்களும் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அவரது நெருங்கிய உதவியாளர்களில் பெரும்பாலும் அவரைத் தவிர்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உத்தியோகபூர்வமான விடயங்களிலும் டிரம்ப்பைக் காணக் கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற காலத்திலிருந்து நோக்கினால் பதவியில் அவரது கடைசிக் காலத்தில் அவருக்கான ஆதரவு நிறையவே குறைந்திருக்கிறது. மிகக் குறைவானவர்களே அவர் தனது பொறுப்புக்களை பாராட்டக்கூடிய வகையில் செய்கிறாரென்று குறிப்பிடுகிறார்கள். டிரம்ப்பின் ரிபப்ளிகன் கட்சியினரிடையே மிகப்பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது தடவையாக உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளாகும் அமெரிக்க ஜனாதிபதியாகியிருக்கிறார் டிரம்ப்.
இன்று தனது பதவிக்காலத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லும் வீடியோ பேச்சு ஒன்றை அவர் வெளியிடுவாரென்று அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்தும் அவர் தான் தேர்தலில் தோற்றதாக ஒத்துக்கொள்ளப்போவதில்லையென்றே பெரும்பாலானோர் கணிக்கிறார்கள்.
சுமார் நூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு இன்று அவர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவாரென்று குறிப்பிடப்படுகிறது. தனது குடும்பத்தினருக்கும், மிக நெருங்கியவர்களுக்கும் அவர் மன்னிப்பு வழங்குவதுடன் தனக்கும் மன்னிப்பு வழங்கிக்கொள்வாரா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெறுவதற்காக டிரம்ப்புக்கு நெருங்கியவர்கள் பெரும் தொகை பணத்தைப் பேரம் பேசி வாங்கிக்கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்