டிரம்ப்பை கழுவி ஊத்துகின்றன இதுவரை அவரை ஆராதித்த பழமைவாத ஊடகங்கள்.

நவம்பர் 08 இல் அமெரிக்காவில் நடந்த நடுத்தவணைத் தேர்தல் முடிவுகள் வெளியாகித் தனது ஆதரவு வேட்பாளர்கள் வென்றதும் அவர்களின் ஆராதனைகளுடன் தான் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராவதை வெளியிடக் கனவு கண்டார் டொனால்ட் டிரம்ப். ஆனால், தேர்தல் முடிவுகள் டிரம்ப் பொறுக்கியெடுத்து முன்வைத்த சில முக்கிய தலைகளை உருட்டிவிட்டது. டிரம்ப் ஆதரவு முர்டொக் ஊடகம் அதை விமர்சித்து, “ரிபப்ளிகன் கட்சியின் அடிமோசமான தோல்வி டிரம்ப்,” என்று தலையங்கம் எழுதியிருக்கிறது.

கடந்த 20 வருடங்களில் ஆட்சியிலிருந்த எந்த ஒரு கட்சியும் பெறாத அளவு ஆதரவை இம்முறை டெமொகிரடிக் கட்சியினர் தமது நடுத்தவணைத் தேர்தலில் பெற்றிருக்கின்றனர் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதுவரை வந்திருக்கும் முடிவுகளின்படி எந்தக் கட்சி பாராளுமன்றத்தின் எந்தச் சபையில் பெரும்பான்மையை அடையும் என்று தெரியாத நிலைமையே தொடர்கிறது.

டிரம்ப்பின் பழமைவாதக் கோட்பாடுகளை ஆதரிக்கும் இதுவரை அவருக்கு ஆதரவாக எழுதிவந்த ஊடகங்களில் முக்கியமானது முர்டொக் ஊடகக் குழுவின் Wall Street Journal ஆகும். அதன் தலையங்கத்தில் ரிபப்ளிகன் கட்சியின் எதிர்பார்த்த வெற்றிக்கான காரணம் டொனால்ட் டிரம்ப் தான் என்று விமர்சிக்கப்பட்டது மட்டுமன்றி மேலும் ஒரு டிரம்ப் விசிறி ஊடகமான Fox News  உம் அவரைக் கழுவி ஊத்தியிருக்கிறது. டிரம்பை எதிர்த்து ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக வருவதற்குக் கொடி தூக்கியிருக்கும் டிசாந்திஸ் என்ற புளோரிடா கவர்னரின் ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டிருக்கிறது  Fox News. “நடுத்தவணைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஆளுநர் ரான் டிசாந்திஸ் ஆவார், புளோரிடா மாநிலத்தில் அவரது மகத்தான வெற்றி அதிரவைக்கக்கூடியது,” என்று Fox News செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். முர்டொக் நிறுவனத்தின் மற்றைய ஊடகங்களிலும் டிரம்ப் தான் ரிபப்ளிகன் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

டிரம்ப் தனக்கு ஆதரவளித்து வந்த ஊடகங்களின் தேர்தல் முடிவு விமர்சனங்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.  அத்துடன் டி சாந்திஸ் பற்றியும் இழிவாகப் பேசி வருகிறார். கடந்த தேர்தலில் மயிரிழை வித்தியாசத்தில் புளோரிடாவில் வென்ற டிசாந்திஸ் இம்முறை 20 விகிதத்துக்கும் அதிகமான வாக்குகளால் தனக்கெதிராகப் போட்டியிட்ட டெமொகிரடிக் கட்சிக்காரரை வென்றிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *