தன் வனவாசத்தை முடித்துக்கொண்டு, தேர்தல் பிரச்சாரம் போன்ற பேரணியொன்றில் கலந்துகொண்டார் டிரம்ப்.

“பாராளுமன்றத்தையும், செனட் சபையையும் மீண்டும் கைப்பற்றுவோம் ஒன்று சேருங்கள்,” என்ற அறைகூவலுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்கிய பின்பு முதல் தடவையாகப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு தனது ஆதரவாளர்களை ஒன்றுகூட்டினார் டிரம்ப். வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் உதவியாளராக இருந்த அவரது விசிறி மாக்ஸ் மில்லர், ஓஹாயோ மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தலொன்றில் வேட்பாளராக அறிமுகமாகிறார்.

குறிப்பிட்ட தொகுதியில் ஏற்கனவே ரிபப்ளிகன் கட்சியின் பிரதிநிதியாக இருக்கும் அண்டனி கொன்ஸாலஸ் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். அவர் டிரம்ப்பை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் வன்முறைக்குத் தூண்டிவிட்டவர் என்ற குற்றத்துக்காக நீதியின் முன்பு நிறுத்தவேண்டும் என்ற டெமொகிரடிக் கட்சியினரின் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தவராகும். ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.

தனக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அடுத்த் தேர்தல்களில் போட்டியிடும்போது அவர்களுக்கு எதிராகத் தனது விசுவாசிகளான ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்களர்களை ஆதரித்து அவர்களை வீழ்த்துவது என்று டிரம்ப் சூழுரைத்திருக்கிறார். அந்தப் பழிவாங்கலின் முதல் கட்டமாகவே மாக்ஸ் மில்லரை ஆதரிக்கும் பேரணியை ஒழுங்குசெய்திருந்தார் டிரம்ப்.

https://vetrinadai.com/news/acquitted-trump/

பதவி விலகிய பின்னர் இதுவரை பெரும்பாலும் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளாமலிருந்த டிரம்ப் முதல் முறையாகப் பங்குபற்றும் இந்தப் பேரணியானது அவரது “மீண்டும் ஜனாதிபதி” குறிக்கோளின் முதல் கட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து அவர் ஜூலை 4 ம் திகதியன்று இன்னொரு பேரணியை புளோரிடா மாநிலத்தில் நடத்தவிருக்கிறார் என்று அறிவிக்கப்படுகிறது.

மான்ஹட்டன் மாநில அரச வழக்கறிஞர்கள் விரைவில் டிரம்ப் மீது பொருளாதார ஏமாற்றுக் குற்றங்களுக்காக வழக்குத் தொடரவிருக்கும் இச்சமயத்தில் டிரம்ப் இந்தப் பேரணியில் கலந்துகொண்டார். அனேகமாக வரும் வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் அவ்வழக்குகள் தன்னை அனாவசியமாக வேட்டையாடும் முயற்சி என்று டிரம்ப் குறிப்பிட்டு வருகிறார்.

டிரம்ப் தேர்தலில் தோற்றவுடன் ஆரம்பித்த அமைப்பான Save America வின் மூலம் இந்தப் பேரணி நடாத்தப்பட்டது. ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்திருக்கும் பல பொருளாதாரத் திட்டங்கள், அவரது குடியேற வருபவர்கள் பற்றிய திட்டம் ஆகியவைகளை முக்கிய பேச்சாளராகவிருக்கும் டிரம்ப் சாடினார். ஜனாதிபதித் தேர்தலில் தான் உண்மையில் தோற்கவில்லை, திட்டமிட்டுத் தேர்தலில் ஏமாற்று வேலைகள் செய்து தன்னைத் தோற்கடித்தார்கள் என்ற குற்றச்சாட்டை மீண்டும் டிரம்ப் முக்கியமாகக் குறிப்பிட்டார். அதை “நூற்றாண்டில் ஏமாற்றுவேலை” என்று முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டு வருகிறார்.

பல ரிப்பப்ளிகன் தலைவர்களும், அதிகாரிகளும் தேர்தல் சரியாகவே நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டு வந்தாலும் ரிபப்ளிகன் கட்சியின் 53 % ஆதரவாளர்கள் டிரம்ப் தான் உண்மையில் வென்றார் என்றும் அவரை மீண்டும் ஆட்சியிலமர்த்தவேண்டும் என்றும் நம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் டிரம்ப் தானே ஜனாதிபதி வேட்பாளர் என்பதை அறிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை நேற்றைய கூட்டத்தில் அவர் குறிப்பிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *