ஆஸ்ரேலியாவின் அகதிகள் கையாளல் கோபிகா, தர்ணிகா சகோதரிகளால் மீண்டுமொருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களான பிரியா – நடா முருகப்பன் ஆகியோர் 2018 இல் அவர்களுடைய அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்வரை குவீன்ஸ்லாந்தின் நகரொன்றில் வாழ்ந்தார்கள். அங்கே இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மூத்தவள் கோபிகா, இளையவள் தர்ணிகா. 

அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் உடனடியாக சிறீலங்காவுக்குத் திருப்பியனுப்பப்படாமலிருக்க நீதிமன்றத்தின் மேலிடங்களில் வழக்குத் தொடர்ந்தது. அச்சமயத்தில் முதலில் மெல்போர்னில் ஒரு வருடம் குடும்பத்தினர் அகதிகள் முகாமில் வாழ ஒழுங்குசெய்யப்பட்டது. அடுத்த கட்டமாக ஆஸ்ரேலியாவின் வழக்கம்போல அவர்களும் தீவு அகதிகள் முகாமான கிரிஸ்துமஸ் ஐலண்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

அதேசமயத்தில் அவர்கள் குவீன்ஸ்லாந்தில் வாழ்ந்த பிலோஎலா நகர மக்கள் அவர்களுக்கு ஆஸ்ரேலிய அரசு அகதிகள் அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று கோரி ஊடகங்கள், வழக்கறிஞர்கள், பேரணிகள் மூலம் கோரிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளினால் ஆஸ்ரேலியா முழுவதுமே முருகப்பன் குடும்பத்தின் நிலைமை பற்றிய விடயங்கள் பரவியிருக்கிற்து. அது ஆஸ்ரேலியாவின் சமீப வருட அகதிகள் கையாளலின் நிலைப்பாட்டிலிருக்கும் மனிதாபிமானமின்மை பற்றியும் வெளிப்படுத்தி வருகிறது.

கிரிஸ்துமஸ் ஐலண்டில் கடும் பாதுகாப்பில் வாழும் அகதிகளுடன் முகாமில் வாழ்ந்துவந்த முருகப்பன் குடும்பத்தில் ஏற்பட்ட மேலுமொரு நிலைமை அவர்களுடைய கதையை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அது தர்ணிக்கவுக்குத் திடீரென்று ஏற்பட்ட உயிரைக் குடிக்கும் வியாதியாகும்.

நிமோனியா மற்றும் இரத்தத்தில் நஞ்சு ஆகியவைகளால் நாலு வயதுத் தர்ணிகா திடீரென்று பாதிக்கப்படவே அவளுக்குச் சிகிச்சை செய்ய அவளது தாயுடன் ஆஸ்ரேலியாவின் பேர்த் நகரிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். நடாவும் மூத்த சகோதரியும் தொடர்ந்தும் கிரிஸ்துமஸ் ஐலண்ட் அகதிகள் முகாம் சிறையிலேயே தங்கியிருந்தார்கள்.

ஆனால் அதை ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் நாடெங்கும் பரப்பி ஆஸ்ரேலிய அரசின் மீது அழுத்தத்தை உண்டாக்கியதால் வேறு வழியின்றி நடாவும், கோபிகாவும் பேர்த்துக்குக் கொண்டுவரப்பட்டார்கள். தர்ணிகாவின் சிகிச்சைக்காலத்தில் அங்கே அவர்கள் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் பத்து வருடங்களாகவே நீர்வழியாக நாட்டுக்குத் தஞ்சம் கோரி வருபவர்களைக் கடுமையான கையாளலுக்கு உட்படுத்தி வருகிறது ஆஸ்ரேலியா. அவர்கள் அகதிகள் சிறை முகாமெனப்படும் கிரிஸ்துமஸ் ஐலண்டுக்குக் கொண்டு சென்று 24 மணி நேரக் காவலில் வாழவைக்கப்படுகிறார்கள்.  கடும் விமர்சனத்துக்கு உண்டாகியிருகும் அந்த நடவடிக்கையின் காரணம் தொடர்ந்தும் அகதிகள் ஆஸ்ரேலியாவுக்கு வராதிருக்கச் செய்யவேயாகும்.

ஆனால், தர்ணிகாவின் வியாதியால் முருகப்பன் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கு நிலைமை ஆஸ்ரேலிய அரசைத் தளம்பவைத்திருக்கிறது. தனது நிலையில் சிறிது மசிந்திருக்கும் அரசு “மக்களின் ஆர்வம்” என்ற காரணம் காட்டி முருகப்பன் குடும்பத்தினருக்கு மூன்று மாதத் தற்காலிக விசா கொடுத்திருக்கிறது.

அவர்களைத் திரும்பி சிறீலங்காவுக்கு அனுப்பும் திட்டத்திலிருக்கும் அரசை மனம் மாறவேண்டுமென்று கோரித் தற்போது நாடெங்கும் குரல்கள் எழுந்து வருகின்றன. அது ஆஸ்ரேலியாவின் அரசாங்கத்தைக் கடுமையாகச் சிந்திக்க வைத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. முருகப்பன் குடுமத்தினருக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கும்படி எழுந்திருக்கும் கோரிக்கையை ஆஸ்ரேலிய அரசு ஏற்றுக்கொள்ளுமானால், அது மேலும் பல ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கும் அதே போன்ற முடிவை எடுக்கவேண்டிய நிலைமை உண்டாகும்.

நிலைமையை ஆஸ்ரேலிய அரசு எப்படிக் கையாளப்போகிறது என்பதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *