கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்ற மற்றொரு கப்பலிலும் தீ!அந்தமான் அருகே அழிவு ஆபத்து.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது. லைபீரிய நாட்டின் கொடி பறக்கவிடப்பட்ட “மெஸ்ஸீனா” (MSC Messina) என்னும்கப்பலிலேயே அதன் இயந்திர அறைப் பகுதியில் தீ பரவியுள்ளது என்று இந்தியக் கடலோரக் காவற்படை தெரிவித்திருக்கிறது.

இந்து சமுத்திரத்தில் அந்தமான்- நிக்கோபார் தலைநகர் போர்ட் பிளேயரில்(Port Blair) இருந்து 425 கடல் மைல் தொலைவில் செயலிழந்து நிற்கின்ற அந்தக் கப்பலுக்கு அவசர உதவிகளை வழங்கி வருவதாகஇந்தியக் கடற்படையின் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இலங்கையின் தெற்கு கிரிந்த (Kirinda)முனையில் இருந்து 483 கடல் மைல்கள்தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் அந்தக் கப்பல் தரித்து நிற்பதாக இலங்கைக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்துகடந்த 23 ஆம் திகதி சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட அக் கப்பல் நேற்று அதிகாலை அது இலங்கைக் கடற்பரப்பினுள் சென்றுகொண்டிருந்த சமயத்தில் அதிலிருந்துஅவசர உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்றும், பின்னர் அது இலங்கைக் கடல் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது எனவும் இலங்கைக் கடற்படை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

தீ பரவியுள்ள கப்பலில் 28 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் காணாமற் போயுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரையோரக் காவல் படையின் உதவி மற்றும் மீட்புக் கப்பல் ஒன்றும் விமானங்களும் உதவிக்கு விரைந்துள்ளன.

கொழும்புத் துறைமுகம் அருகே தொன் கணக்கான இரசாயனப் பொருள்கள்மற்றும் பிளாஸ்ரிக் என்பவற்றுடன்”எக்ஸ்-பிரஸ் பேர்ள்” (X-Press Pearl)என்ற கப்பலில் பரவிய தீயினால் பேரனர்த்தம் இடம்பெற்று சில வாரங்களுக்குள் இந்த இரண்டாவது கப்பல் விபத்துத் தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது.”எக்ஸ்-பிரஸ் பேர்ள் “கப்பல்தீ அனர்த்தம் இலங்கையின் கடற் சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், திமிங்கலங்கள், டொல்பின்கள் போன்ற அரிய பல நீரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன. அந்தக் கப்பலில் இருந்த இரசாயனப் பொருள்களில் முதலில் தீ பரவிய தகவல் வேண்டும் என்றே மறைக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை விசாரணைகள் வெளிப்படுத்தியிருந்தன.

https://vetrinadai.com/news/sri-lanka-maritime-accident/

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *