முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீட்டில் அமெரிக்க நீதியமைச்சின் அதிரடிச் சோதனை.

முதலாவது தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் Mar-A-Lago, Palm Beach வீடு நீதியமைச்சின் அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அது பற்றிய விபரங்களை நீதியமைச்சு வெளியிடவில்லை. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி பதவி விலகியபோது பல முக்கிய அரச ஆவணங்களைத் திருப்பிக்கொடுக்காமல் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவைகளையே அதிகாரிகள் தேடியதாகவும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

ஒரு ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிந்தவுடன் தன்னிடமிருக்கும் அரச கோப்புகள், ஆவணங்களைத் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பது நியதி. டொனால்ட் டிரம்ப் அதைச் செய்யாமல் வெள்ளை மாளிகைக்குச் சொந்தமான பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. ஆவணங்களைப் பாதுகாக்கும் அதிகாரம் சில மாதங்களுக்கு முன்னர் டிரம்பிடமிருந்து இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியதாகச் செய்திகள் வந்திருந்தன.

காணாமல் போயிருப்பதாகக் கூறப்படும் ஆவணங்கள் பல, வெளியார் கைகளில் அகப்பட்டால் அரச கட்டடங்களின் பாதுகாப்புக்குப் பாதகமாகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வேறு சில ஆவணங்கள் அமெரிக்காவுக்கு, மற்ற நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கொண்டவை என்றும் அவை பகிரங்கமாகினால் அந்த நாடுகளுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

நீதியமைச்சின் அதிகாரிகள் டொனால்ட் டிரம்ப் வீட்டில் தேடிய ஆவணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருப்பின் அவை அவரை நீதியின் முன்னர் நிறுத்தித் தண்டிக்கலாம். அப்படியான நிலைமையில் அவர் மீண்டுமொருமுறை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடலாகாது.

நடாத்தப்ப்ட்ட சோதனைகளை ரிபப்ளிகன் கட்சி அரசியல்வாதிகள் பலரும், டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். டெமொகிரடிக் கட்சியினர் நீதியமைச்சைத் தமது ஆயுதமாகப் பாவித்து டிரம்ப்பின் அரசியல் எதிர்காலத்தில் கறைபூச முயல்வதாக அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *