செனட் சபையை மீண்டும் கைப்பற்றிய செய்தி கேட்டுத் திருப்தியடைந்தார் ஜோ பைடன்.

அமெரிக்க செனட் சபையின் 50 வது இடத்தை ஆளும் கட்சியான டெமொகிரடிக் கட்சியினர் மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. ரிபப்ளிகன் கட்சியினர் 49 இடங்களை மட்டுமே வென்றிருக்கும் நிலையில் 51 வது வாக்கை உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் பாவிக்கலாம் என்பதால் அச்சபையின் பெரும்பான்மை மீண்டும் டெமொகிரடிக் கட்சியிடம் தங்கியிருக்கிறது. மேலுமொரு இடமான  ஜோர்ஜியா மறுதேர்தல் டிசம்பர் மாதத்தில் நடக்கும். அதில் எந்தக் கட்சி வென்றாலும் செனட் சபைப் பெரும்பான்மை மாறாது. செய்தி அறிந்த ஜோ பைடன், “தேர்தல் முடிவு என்னைப் பெரிதும் ஆச்சரியப்படவைக்கவில்லை. மிகவும் திருப்தியடைகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

பதவியிலிருக்கும் ஜோ பைடன் ஆதரவு டெமொகிரடிக் கட்சியினரிடமே பலவீனமாக இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தின் விளைவாலான விலையுயர்வுகளால் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. இந்தச் சமயத்தைப் பயன்படுத்திப் பெருவெற்றியை எதிர்பார்த்த ரிபப்ளிகன் கட்சியினருக்குத் தேர்தல் பெரும் மூக்குடைப்பாக அமைந்திருக்கிறது.

பதவியிலிருக்கும் செனட்டரான கத்தரின் கோர்டெஸ் மஸ்டோ 48.8 வித வாக்குகளைப் பெற்று எதிர்த்தரப்பில் போட்டியிட்ட அடம் லக்சால்ட்டை வெற்றிபெற்றிருக்கிறார். 48.1 % வாக்குகளையே லக்சால்ட்டால் பெற முடிந்திருக்கிறது.

பிரதிநிதிகள் சபை வாக்குகளை எண்ணுதல் தொடர்கிறது. 218 இடங்களைப் பெற்றுப் பெரும்பான்மையை அடையவேண்டிய நிலையில் 211 இடங்களை ரிபப்ளிகன் கட்சியினர் பெற்றிருக்கிறார்கள். 203 இடங்களையே இதுவரை டெமொகிரடிக் கட்சியினர் பெற்றிருப்பதால் அவர்கள் அதன் பெரும்பான்மையை இழக்கலாம் என்றே தொடர்ந்தும் நம்பப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *