நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்த பெண்கைதியின் மரண தண்டனை அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

17 வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இவ்வருடம் ஜூலை மாதம் மரணதண்டனைகளை நிறைவேற்ற மீண்டும் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் 10 மரண தண்டனைகளை இதுவரை நிறைவேற்றியுள்ளன. ஆண் குற்றவாளிகளே இதுவரை மரணத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.

லிஸா மொண்ட்கொமெரி என்ற 52 வயதுக் கைதி மட்டுமே பெண்ணாகும். சிறுவயது முதல் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட லிஸா மனநோயாளி என்பதைக் கருத்தில் கொள்ளாமலே அவர் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று அவருடைய வயிற்றிலிருந்த சிசுவை வெட்டியெடுத்தாள் லிஸா. அக்குழந்தையைத் தனது வீட்டுக்குக் கொண்டுவந்து தனது வயிற்றிலிருந்த குழந்தை என்று கணவனிடம் சொன்னாள். வாழ்நாள் முழுவதுமே பல விதமான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட லிஸாவுக்குத் தான் எப்போதுமே பிரசவமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நோயும் இருந்தது.

வழக்கு நடந்தபோது அவளுடைய மனோவியாதி பற்றிய விபரங்களெல்லாம் ஜூரிகளுக்குத் தெரியாதிருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டபின் அவளைப்பற்றிய விபரங்களைப் பலர் தேடியறிந்து அவற்றை முன்வைத்தபோதும் வழக்கை மீண்டும் நடத்த முடியாமல் போனது. எனவே லட்சக்கணக்கான கையெழுத்துகள் போடப்பட்டும், சில நீதிபதிகளின் வேண்டுதலும் சேர்ந்தும் அவளது மரண தண்டனையை நிறுத்தும்படி கேட்டு அதுவும் நடக்கவில்லை. டிரம்ப்பிடம் அவளுக்கு ஜனாதிபதி மன்னிப்புக் கொடுக்கும்படி வேண்டியதையும் அவர் மறுத்துவிட்டார்.

இந்த நாட்களில் நிறைவேற்றப்படவிருந்த அவளது மரண தண்டனையை தற்போது ஒரு மாநில நீதிமன்றம் ஜனவரிக்குப் பின்னர் நிறைவேற்றும்படி தடுத்திருக்கிறது. நோக்கம் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர் அமெரிக்காவில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை ஒரு வேளை அவர் நிறுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பினாலாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *