பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவருக்குஒரு ஈரோவுக்கு மதிய உணவு!
பிரான்ஸில் பல்கலைக்கழகங்களின் கன்ரீன்களில் ஒரு ஈரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். தேவைப்படும் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு தடவை உணவை ஒரு ஈரோ கட்டணத்துக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரும் தொற்றுக்கால நெருக்கடிகளால் வருமானம் இழந்த நிலையில் கல்வியைத் தொடரும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரதும் நலன் கருதி இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.புலமைப்பரிசில்(boursiers) உதவி பெறாத மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் இத்திட்டம் பயன் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பாரிஸின் தென்மேற்குப் புற நகரான சக்லேக்கு (Saclay-Essonne) விஜயம் செய்த அதிபர் மக்ரோன் அங்கு பிரபல சக்லே பல்கலைக்கழக மாணவர்களுடன் (University of Paris-Saclay) கலந்துரையாடல்களை நடத்தினார்.
நாட்டில் பகுதி நேரமாகத் தொழில்களைச் செய்து கொண்டு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் வைரஸ் நெருக்கடி காரணமாக வருமான இழப்பைச் சந்தித்துள்ளனர். மதிய உணவுக்குக் கூட வழியற்ற நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த நிலைவரத்தைச் சுட்டிக்காட்டிய அதிபர் மக்ரோன், மாணவர்களது கல்வி நெருக்கடிகள் இரண்டாவது கல்வித் தவணையிலும் (second semester) நீடிக்கும் என்று தெரிவித்தார்.
“நாம் இன்னும் நிச்சயமற்ற ஒரு நிலைமையிலேயே இருக்கிறோம். கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது. இரண்டாவது தவணைக்காலத்தில் (second semester) நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்பது சாத்தியம் இல்லை.
சுகாதார விதிகள், தடைகளுடன் அடுத்த கோடை வரை நாங்கள் வாழ வேண்டி இருக்கும் “-என்று மக்ரோன் மாணவர்களிடம் விவரித்தார்.(படம் :சக்லே (Saclay) பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் மக்ரோன்.)
27276 sharesLikeCommentShare