இந்தோனேசியக் கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இரண்டு ஈரானியக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரானியக் கொடியுடனான MT Horse என்ற கப்பலையும் பனாமாவின் கொடியுடனான MT Freya என்ற கப்பலையும் இந்தோனேசியா ஞாயிறன்று கைப்பற்றித் தனது துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாக அறிவிக்கிறது. இவ்விரண்டு கப்பல்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எரிநெய்ப் பரிவர்த்தனத்தில் சந்தேகத்துக்கிடமாக ஈடுபட்டிருந்ததாக இந்தோனேசியா அறிவிக்கிறது.
கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்புவதற்காகவும், வர்த்தகக் கப்பல்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் கப்பல்களில் அவைகளின் புவியியல் விலாசத்தைக் காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், ஒவ்வொன்றும் இரண்டு மில்லியன் லிட்டர் எரிநெய்யைக் கொள்ளக்கூடிய குறிப்பிட்ட இரண்டு கப்பல்களும் தமது அடையாளங்களைக் காட்டும் கருவிகளை அணைத்திருந்தன. களவான செயற்பாடுகளில் ஈடுபடும் கப்பல்கள் அப்படியான செயல்களைச் செய்வது வழக்கம். அக்கப்பல்களிரண்டும் சிங்கப்பூருக்கு அருகேயிருந்த கடற்பிராந்தியத்தில் இதற்கு முன்னர் காணப்பட்டன. அதன்பின் கண்காணிப்புக்குக் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.
கையும் களவுமாகக் எரிநெய்யை ஒன்றிலிருந்து மற்றக் கப்பலுக்கு மாற்றும்போது பிடிக்கப்பட்ட கப்பல்களின் 61 ஊழியர்களையும் இந்தோனேசியா விசாரணை செய்வதற்காகத் தன்வசப்படுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளினால் எரிநெய் விற்கத் தடைசெய்யப்பட்ட நாடுகளான ஈரானும், வெனிசூலாவும் ஒருவருக்கொருவர் எரிநெய் விற்றல் – வாங்கலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட ஈரானியக் கப்பல் தமது கண்காணிப்புக் கருவிகளை அணைத்துவிட்டு வெனிசுவேலாவுக்கு எரி நெய் விற்பதும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் எரிநெய்வள அமைச்சர் சாத் கதிப்ஸாதே தமது கப்பல்களைப் பிடித்ததற்கான விபரங்களை வெளியிடும்படி இந்தோனேசியாவிடம் திங்களன்று கோரியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்