டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.
சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ இயற்கை வாயு ஏற்றுமதி செய்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
கடுமையான குளிர் அந்த மாநிலத்தின் பெரும்பாலான பாகங்களைத் தன் பிடிக்குள் வைத்திருக்க, உறைபனி போக்குவரத்துக்களையெல்லாம் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிக்கும் நிலையங்களெல்லாம் செயற்பட முடியாததால் மூடப்பட்டிருக்கின்றன. எனவே உள்மாநிலத் தேவைக்காக மின்சாரத்தை விரைவாகச் செயலுக்குக் கொண்டுவரவே இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் சகல மாநிலங்களையும் விட அதிக அளவில் எரிநெய்யையும், இயற்கை வாயுவைத் தயாரிக்கும் டெக்ஸாஸ் மாநிலம் அந்த மாநிலங்கள் போன்று உறைபனிக்காலத்தை நேரிடுவதில் தேர்ந்ததில்லை என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
2011 இதே போன்ற குளிர்த் தாக்குதலால் சுமார் மூன்று மில்லியன் பேர் சில நாட்கள் மின்சாரமின்றி வாழ்ந்தார்கள், நிறுவனங்கள் மூடப்பட்டன. காரணம் டெக்ஸாஸ் மாநிலம் தனது பகுதியிலிருக்கும் மின்சார அமைப்புக்கள், தொடர்புகளைக் குளிர்காலத்தைத் தாங்கும்படி அமைக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் சுமார் 25% இயற்கை வாயுவைத் தயாரிக்கும் டெக்ஸாஸ் மாநிலம், நாட்டின் 40 % விகித இயற்கை வாயு ஏற்றுமதியாளராகவும் இருக்கிறது. தன் பாவனைக்குத் தன் தயாரிப்பில் மிகச் சிறிய அளவையே எடுத்துக்கொள்கிறது.
இந்த மாநிலம் ஏற்றுமதியை நிறுத்தும்போது அது பக்கத்து நாடுகளுக்கும் சிக்கலாகிறது. குளாய்கள் மூலம் டெக்ஸாஸ் மாநில இயற்கை வாயுவைக் கொள்வனவு செய்து வரும் மெக்ஸிகோ தனது தேவையின் பெரும் பாகத்துக்கு அதிலேயே தங்கியிருக்கிறது.
டெக்ஸாஸ் மாநில இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தலால் விசனமடைந்திருக்கும் மெக்ஸிகோ தமது நாட்டுக்குத் தேவையான இயற்கை வாயுவை நிச்சயப்படுத்தும்படி அமெரிக்க அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்