பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களில் தீவிர தொற்று! மூடிமுடக்க யோசனை
தீவிர வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் (Alpes-Maritimes) பிராந்தியம் பகுதியாக மூடி முடக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.
இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை மதிப்பீடு செய்த சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன், அங்கு பகுதியளவு பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு அறிவிக்கப் படவுள்ளன.
அவசரமாக அப் பிராந்தியத்துக்கு மேலதிக தடுப்பூசி மருந்தை அனுப்பு வதற்கு அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். உள்ளூர் மட்டத்தில் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்யவேண்டிய அளவுக்கு தொற்று நிலைவரம் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பொலீஸ் தலைமையகம் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் புதிய கட்டுப்பாடுகள் அடுத்த 48 மணி நேரத்தினுள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் பிராந்தியத்தில் ஒரு லட்சம் குடியிருப்பாளர்களுக்கு 581 பேர் என்ற கணக்கில் வைரஸ் தொற்றுக் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாளாந்தம் ஐந்நூறுக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகின்றனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிகள் 121 வீதமாக உயர்ந்துள்ளன.
நாட்டின் இதர பகுதிகளுடன் ஒப்பிடும் போது நீஸ்(Nice) நகரில் மூன்று மடங்கு அதிகமான தொற்று வீதம் உள்ளது.
பிரான்ஸின் தென்கிழக்குப் பிராந்தி யமாகிய ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் அதன் அழகிய கடற்கரைகளால் உலகப் புகழ்பெற்றது.
(படம் :ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் பிராந்தியத் தின் மூலான் (Moulins) சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஒலிவியே வேரன்)
குமாரதாஸன். பாரிஸ்.