சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட ரஷ்யாவை எதிர்கொள்ள போலந்து மறுப்பு.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகப் பல தடைகளைப் போட்டிருக்கின்றன. ரஷ்யாவுக்கெதிராக விளையாட்டு அரங்கிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கத்தாரில் நடக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் பங்குகொள்ளும் மோதல்களில் ரஷ்யாவுக்கெதிராக மோத மறுத்திருக்கிறது போலந்து.
மார்ச் மாதத்தில் நடக்கவிருந்த போலந்து – ரஷ்யா மோதலில் பங்குகொள்ள மாட்டோம் என்று போலந்தின் தேசிய உதைபந்தாட்டக்குழு சனியன்று தெரிவித்திருக்கிறது. அந்த மோதலில் வெற்றிபெறுபவர் அதையடுத்து சுவீடன் – செக் குடியரசு ஆகியவைக்கான மோதலில் வெற்றிபெறும் அணியுடன் மோதவேண்டும். ஏற்கனவே சுவீடன், செக் குடியரசு ஆகிய நாடுகளின் தேசிய உதைபந்தாட்டக் குழுக்கள் தாம் ரஷ்யாவில் எந்த மோதலிலும் ஈடுபடத் தயாராக இல்லை என்று அறிவித்திருக்கின்றன.
“நாங்கள் தேசிய உதைபந்தாட்டக் குழுவாக ஒன்றிணைந்து இந்தக் கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குக் காரணம் உக்ரேன் மீது ரஷ்யா செய்திருக்கும் ஆக்கிரமிப்பு ஆகும். உதைபந்தாட்டம் தவிர்ந்த எத்தனையோ முக்கிய விடயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. நாம் உக்ரேன் மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்கிறது போலந்தின் உதைபந்தாட்டக் குழுவின் அறிக்கை.
“ரஷ்யாவின் வீரர்களும், மக்களும் தமது அரசு செய்திருக்கும் இந்த அநியாயத்துக்குப் பொறுப்பல்ல. ஆனாலும், போலந்தின் தேசியக் விளையாட்டுக் குழு எடுத்திருக்கும் முடிவு சரியானதே. எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு நாம் இதைக் கடந்துவிட முடியாது,” என்கிறார் போலந்தின் நட்சத்திர விளையாட்டு வீரர் ரொபேர்ட் லெவாண்டோவ்ஸ்கி டுவீட்டரில்.
சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பான FIFA ஏற்கனவே எடுத்த முடிவு ரஷ்யா மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதாகும். FIFA அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பண்டினோ ரஷ்ய ஜனாதிபதி புத்தினின் மிக நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவராகும். எனவே அந்த அமைப்பின் மீது ஏற்கனவே கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
போலந்தின் தேசிய உதைபந்தாட்டக்குழுவானது சுவீடன், செக் குடியரசின் தேசிய உதைபந்தாட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய நோக்கம் ஒன்றிணைந்து ரஷ்யாவை எப்படி உதைபந்தாட்ட விடயங்களில் எதிர்கொள்வது என்பதாகும். இன்று மாலையில் இந்த நாடுகள் ஒன்றிணைந்து தமது முடிவைத் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்