கவிஞன் யார்|கவிநடை

துன்பத்தீ எரித்தாலும் எதிரே நின்று
துரத்துகின்ற சக்தியோனே கவிஞன் ஆவான்!
மன்னவனே என்றாலும் தவறி ழைப்பின்
மருளாமல் எதிர்ப்பவனே கவிஞன் ஆவான்!
இன்னாரின் ஒன்னாரின் செயல்கள் தன்னை
எதிர்கொண்டு முறியடிப்போன் கவிஞன் ஆவான்!
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசை கொள்ளா
பொதுநெறியைக் கொண்டவனே கவிஞன் ஆவான்!

கொடியோரின் செயல்கண்டு கொதித்தெ ழும்பி
கொடுமைக்கு முடிவுரைப்போன் கவிஞன் ஆவான்!
இடிபோன்று இன்னல்கள் சூழும் போதும்
எதிர்கொண்டு வெல்பவனே கவிஞன் ஆவான்!
நடிப்போரின் வேடத்தைக் கலைத்தெ றிந்து
நஞ்சகரின் செயலழிப்போன் கவிஞன் ஆவான்!
வெடிபோன்ற சொல்கொண்டு கொடுமை போக்கி
விடிவெள்ளி போல்வாழ்வோன் கவிஞன் ஆவான்!

மக்களுடை நலனொன்றே நாட்டிற் கெல்லாம்
மகத்துவமாய் எண்ணுவோனே கவிஞன் ஆவான்!
நக்கீரன் போல்வாழ்ந்து இறைவன் முன்னும்
நடுங்காமல் வாதுரைப்போன் கவிஞன் ஆவான்!
உக்கிரமாய் தோன்றுவதை உடைத்தெ றிந்து
உலகினையே காப்பவனே கவிஞன் ஆவான்!
அக்கினியாய் உருவெடுத்து ஆதிக் கத்தின்
அகங்கார இருளழிப்போன் கவிஞன் ஆவான்!

எதுவரினும் எதிர்கொள்ளும் ஆற்றல் தன்னை
இலக்கணமாய் கொண்டவனே கவிஞன் ஆவான்!
செதுக்கியேதான் மனங்களினை பதப்ப டுத்தும்
சிறப்புதனை கொண்டவனே கவிஞன் ஆவான்!
பொதுநலனை தம்மூச்சாய் கொண்டு வாழ்ந்து
பொழிப்புரையாய் வாழ்பவனே கவிஞன் ஆவான்!
புதுக்கருத்தை, சமத்துவத்தை, போரே இல்லா
புதுவுலகை எண்ணுவோனே கவிஞன் ஆவான்!

எழுதுவது : பாரதிசுகுமாரன்