தனது திட்டங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பேசிய கிம் யொங் உன்.
வட கொரியாவின் பொருளாதாரம், சுபீட்சம் ஆகியவற்றை முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்ட திட்டங்கள் படு மோசமாகத் தோல்வியடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் நாட்டின் அதிபர் கிம் யொங்-உன்.
நாடு முழுவதிலுமுள்ள சுமார் 7,000 கட்சித் தலைவர்கள் கூடிய மாநாட்டில் உரையாற்றிய கிம் யொங்-உன் 2016 இல் நடந்த மாநாட்டில் போடப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைத் தராததால் கடந்த ஆண்டில் அவைகள் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார். அவர் குறிப்பாக எந்த ஒரு திட்டத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டாமல் எந்தத் திட்டங்கள் எப்படியான முறையில் தோல்வியடைந்திருக்கின்றன என்றும் குறிப்பிடாமல் பொதுவாகப் பேசி, அந்தத் திட்டங்களைப் பற்றியும் அவை நிறைவேற்றப்பட்டதைப் பற்றியும் ஆழமாக ஆராயப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். கிம் யொங்-உன் நாட்டின் வெளிநாட்டு உறவுகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
வட கொரியாவின் நீண்ட தூரம் தாக்கும் குண்டுகளின் தொழில்நுட்பம் பற்றி மெச்சிப் பேசி அவைகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
வட கொரியாவின் சரித்திரத்தில் நடந்த எட்டாவது மாநாடு இதுவாகும். நாட்டின் பிரதமர் மற்றும் சமீப வருடங்களில் கட்சித் தலைமையின் உயர்மட்டத்தில் கிம்முக்குச் சமமாக வளர்ந்திருக்கும் சகோதரி கிம் யு-யொங் ஆகியோரும் இந்த மாநாட்டில் தலைமை தாங்கினர். விரைவில் நாட்டின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமென்றும் கிம் யொங்-உன் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்