மக்கள் புரட்சியால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் கிரிகிஸ்தானில் ஜனாதிபதியாகிறார்.
ஞாயிறன்று (10.01)கிரிகிஸ்தானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் நின்றவருக்கு வெறும் ஏழு விகித வாக்குகளே கிடைக்க மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெறுகிறார் சாடீர் ஜபரோவ். அதே சமயம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி ஜனாதிபதிக்கு அதிக உரிமைகள் கொடுக்கலாமா என்ற கேள்வியும் வைக்கப்பட்டது. அதற்கும் மக்கள் ஆம் என்றே வாக்களித்திருக்கிறார்கள்.
52 வயதான சாடீர் ஜபரோவின் அரசியல் வாழ்க்கை மலைக்கும் மடுவுக்கும் ஊடாகக் கடந்துகொண்டிருக்கிறது. 2010 இல் மத்திய ஆசிய நாடான கிரிகிஸ்தானில் அன்றைய ஜனாதிபதி குர்மான்பேக் பக்கியேவிற்கு ஆலோசகராக இருந்தவர். தனக்கு முன்னால் 2005 இல் ஜனாதிபதியாக இருந்தவரைப் போலவே பக்கியேவையும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் செய்து ஆட்சியிலிருந்து இறக்கினார்கள். அந்தக் கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜபரோவ் தலைமைதாங்கினார்.
அதன் பின்னர் தேர்தலிலும் கிரிகிஸ் தேசியவாதியான ஜபரோவ் வெற்றிபெற்று உயர்பதவியிலிருந்தார். நாட்டின் வடக்குக்கும் தெற்குக்கும் எப்போதுமிருக்கும் மோதல்களும் கலவரங்களும் தொடர்ந்தன. 2013 இல் ஜபரோவ் தங்கச் சுரங்கமொன்றைத் தேசியமயமாக்கும்படி நடத்திய போராட்டத்துக்காகவும், ஜனாதிபதிக்கெதிராக அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டதாகவும் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த ஜபரோவ் தொடர்ந்தும் தான் கைதுசெய்யப்படலாமென்ற நிலைமையில் பக்கத்து நாடானா கஸக்ஸ்தானுக்கு ஓடிப்போய் வாழ்ந்தார். நாட்டை விட்டு வெளியேறிவிட்ட அவர் மீது மீண்டும் வழக்குத் தொடரப்பட்டு 11 வருடங்களும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2017 இல் மீண்டும் நாடு திரும்பிய ஜபரோவ் மீண்டும் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
தேசியவாதியான ஜபரோவ் எப்போதும் தன்னை நாட்டுப் பற்றுள்ள, லஞ்சம் ஊழல்களுக்கெதிரான அரசியல்வாதியாகவும் ஆட்சியிலிருப்பவரை விமர்சிப்பவராகவும் காட்டிவந்தார். அரசின் சர்வாதிகாரம், லஞ்ச ஊழல்களாலும் சோவியத் அமைப்பிலிருந்து வெளியேறிய காலத்திலிருந்தே நாட்டில் ஏற்பட்டுவரும் சிறுபான்மையினத்தவர்களுக்கிடையிலேயான கலவரங்களாலும் களைத்துப்போன மக்கள் 2020 இல் நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள் மக்கள்.
சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்த அந்தப் போராட்டங்களுக்குத் தாக்குப் பிடிக்க இயலாத ஜனாதிபதி ஜீன்பெக்கோவ் பதவியிறங்கினார். அப்போராட்டங்களின் சமயத்தில் சிறையை உடைத்து ஜபரோவை மக்கள் விடுதலை செய்தனர்.
வெளியே வந்த ஜபரோவ் தன்னைப் பிரதம மந்திரியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அரசைக் கைப்பற்றித் தேர்தல்களை மீண்டும் அறிவித்தார். ஜனவரி 10 ம் திகதி நடந்த தேர்தலில் ஜபரோவ் 90 விகிதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவும் ஆகியிருக்கிறார்.
சுற்றிவர உள்ள நாடுகளிலெல்லாம் சர்வாதிகாரிகளே தொடர்ந்து அரசைப் பிடித்துவர கிரிகிஸ்தான் மக்களோ மீண்டும் மீண்டும் தமக்குப் பிடிக்காத தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றி வருகிறார்கள். ஒரு எல்லையில் சீனாவைக் கொண்ட கிரிகிஸ்தான் ரஷ்யாவிலும் கணிசமாகத் தங்கியிருக்கிறது. இவ்விரண்டு வல்லரசுகளையும் சமமாக நேர்கொண்டு, உள்நாட்டிலிருக்கும் வெவ்வேறு சிறுபான்மையினரின் கோரிக்கைகளையும் வெற்றிகரமாகக் கையாளும் பக்குவம் ஜபரோவுக்கு இருக்குமா அல்லது அவரும் தனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆதரவையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரியாகிவிடுவாரா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்