பின்லாந்தின் தொழில்நுட்பத்தால் பொல்சனாரோ தன் பொய்களை மறைக்கிறாரா?

பின்லாந்தின் நிறுவனமொன்று தனது நுணுக்கமான தொழில்நுட்பத்திலான காடுகளைச் செயற்கைக் கோளால் கண்காணிக்கும் இயந்திரத்தை பிரேசிலுக்கு விற்பது பிரேசிலி உள்நாட்டுப் பிரச்சினையொன்றுக்குள் மூக்கை நுழைப்பது போலாகிவிட்டது என்று விமர்சிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் அமெஸான் காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்க அதைக் கண்காணிப்பதற்காக என்ற நோக்கத்தைக் குறிப்பிட்டு அந்த நாட்டு ஜனாதிபதியால் பின்லாந்தின் ICEYE என்ற நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்ட கண்காணிப்புக் கருவிகள் உண்மையிலேயே அக்காடுகள் அழிக்கப்படுவதை வெளியுலகம் தெரிந்துகொள்ளாமலிருக்கப் பயன்படுவதே என்று பிரேசில் நாட்டின் வான்வெளி ஆராய்ச்சி மையம் (INPE) குறிப்பிடுகிறது.  

குறிப்பிட்ட இயந்திரங்களுக்குத் தவறான செய்திகளைக் கொடுப்பதன் மூலம் அதைத் திசைதிருப்பலாம் என்றும் அந்த இயந்திரம் வட துருவத்திலிருக்கும் காடுகளைக் கண்காணிப்பது போன்று மழைக்காடுகளைக் கண்காணிப்பதில் பயன்படாது என்றும் INPE விஞ்ஞானிகள் குறிப்பிட்டு வருகிறார்கள். அதைப் பகிரங்கமாக வெளியிட்டதுடன் பின்லாந்தின் அரசிடமும் குறிப்பிட்டு குறிப்பிட்ட இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்யும்படி அந்த விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பிரேசிலின் வலதுசாரி ஜனாதிபதி பொல்ஸனாரோ தனது நடவடிக்கைகளை விமர்சிக்கும் தனது நாட்டு வெவ்வேறு துறை விற்பன்னர்களைப் பதவியிலிருந்து விலக்கி வருகிறார். அமெஸான் காடுகளை அழித்து அங்கே பயிரிடும் நிலத்தை விசாலமாக்கி நாட்டின் வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்ற கோட்பாட்டை வெளிப்படையாகச் சொல்லியே பதவிக்கு வந்தவர் பொல்சனாரோ. கடந்த சில வருடங்களாகவே அமெஸான் காடுகளை அழிப்பது படு வேகமாக முடுக்கி விடப்பட்டிருக்கிறது என்று பல சர்வதேச அமைப்புக்கள் ஆதாரங்களுடன் விபரித்து வருகின்றன. 

உலகின் கால நிலை மாற்றத்துக்கு இன்னல் செய்யக்கூடிய அமெஸான் அழிப்பை நிறுத்தவேண்டுமென்ற பலரின் கோரிக்கையைப் பகிரங்கமாக பொல்ஸனாரோ மறுத்து வருவதால் ஐரோப்பிய ஒன்றியமும் அவரது அரசுக்குச் செய்யும் உதவிகள் பலவற்றை நிறுத்தி வருகின்றது. பின்லாந்துத் தொழில்நுட்பத்தைப் பாவிப்பதைக் குறிப்பிட்டு தனது நாட்டில் அமெஸான் காடுகள் அழிக்கப்பட்டு வரவில்லை என்று வாதிடவே பொல்ஸனாரோ திட்டமிட்டு வருகிறார் என்றும் விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *