பிரேசிலில் மண்சரிவால் பலர் மடிந்த பிராந்தியத்தில் கடும் மழை மேலும் அழிவுகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரேசிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெள்ளமொன்றால் பாதிக்கப்பட்ட பெட்ரோபொலீஸ் பகுதியில் இறந்தோர் எண்ணிக்கை சுமார் 112 என்று குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்தும் அப்பகுதியைக் கடும் மழை தாக்கவிருப்பதால், தலை நகரான ரியோ டி ஜெனிரோவுக்கு வடக்கிலிருக்கும் அந்த நகர மக்களைத் தமது வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களை நாடுமாறு அரசு கேட்டிருக்கிறது. 

சுற்றுலாவுக்குப் பிரபலமான பெட்ரோபொலீஸ் நகரில் தொடர்ந்தும் சில பகுதிகள் மண்சரிவு பரப்பிவிட்ட பெரும் கற்களால் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கிறது. இறந்தவர்களைத் தவிர தொடர்ந்தும் பலர் காணாமல் போயிருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் மக்கள். 

சமீப வாரந்தளில் தொடர்ந்து அப்பகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட சூறாவளிகளும், புயல்களும் தாக்கியிருக்கின்றன. 500 க்கும் அதிகமான தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும், வலிய வந்து உதவுகிறவர்களும் சேர்ந்து இடிந்துபோன சேரிப்பகுதிகளின் ஊடே தப்பி ஆங்காங்கே மாட்டப்பட்டிருப்பவர்களைத் தேடி வருகிறார்கள். 

காலநிலை மாற்றங்களால் அப்பகுதியின் காலநிலை வழக்கத்துக்கு மாறாக ஈரலிப்பாக இருப்பதால் தொடர்ந்தும் மழையும், வெள்ளமும் தாக்கவிருப்பதாக காலநிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கிறது. வெளிநாட்டுப் பயணத்திலிருக்கும் ஜனாதிபதி பொல்சனாரோ வெள்ளியன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்