கொவிட் 19 தடுப்பு மருந்து விற்பனையைத் தம்மிடம் வைத்திருப்பதால் பணக்கார நாடுகளே பாதிக்கப்படுவார்கள்!
கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிப்பதற்கான போட்டிகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆராய்ச்சிக்கால நேரத்தில் முதலீடுகள் கொடுத்து ஒப்பந்தங்கள் செய்துகொண்டதன் மூலம் விற்பனைக்கு வந்திருக்கும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஏகபோக உரிமைகளை வளர்ந்த நாடுகளே தம் கையில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக உலகளவில் ஏற்படப்போகும் சமூக, ஆரோக்கிய, பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏழை, வளரும் நாடுகளைப் பாதிப்பதுக்கு இணையான பாதிப்புக்களைப் பணக்கார நாடுகளும் அனுபவிக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
இதுபற்றி வெளிவந்திருக்கும் பல்கலைக்கழக ஆராய்ச்சியொன்று, திட்டமிட்டபடி, இவ்வருட நடுப்பகுதியில் பணக்கார நாடுகள் தமது குடிமக்களுக்கெல்லாம் தடுப்பு மருந்து போட்டால் என்னாகும் என்று ஆராய்கிறது. பணக்கார நாட்டு மக்கள் கொவிட் 19 க்கு எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் அதே சமயம் மிச்ச உலகம், பெரும்பாலான மக்கள் தொடர்ந்தும் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டும் இறந்தும் கொண்டிருப்பார்கள்.
அந்த நிலைமையை எதிர்கொள்ள வறிய மற்றும் வளரும் நாடுகள் தத்தம் நாடுகளில் முழுமையான பொருளாதார நடத்தையை இயக்க முடியாது. அடிக்கடி பகுதியாகவோ, பொதுவாகவோ நாடுகள், பிராந்தியங்கள் முடக்கப்படும். விளைவாக உலகப் பொருளாதாரம் சுமார் 9 திரில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடையும் என்கிறது அந்த ஆராய்ச்சி.
குறிப்பிட்ட இந்த வீழ்ச்சியால் பணக்கார நாடுகளும் சம அளவில் பாதிக்கப்படும். ஏனெனில் உலகப் பொருளாதாரம் இன்று ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. ஏற்றுமதி – இறக்குமதிகள் வளர்ந்த, வறிய, வளரும் நாடுகளினிடையே சாதாரணமாக நடந்துகொண்டிருப்பதை எந்த ஒரு பகுதியில் நிறுத்தினாலும் கூட அதனால் உலக நாடுகளுக்கெல்லாம் சமமான பாதிப்பு உண்டாகும் என்கிறது இந்த ஆராய்ச்சி.
சாள்ஸ் ஜெ. போமன்