ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா இடைநிறுத்தம்!

பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனை யைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன.

நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை இடைநிறுத்துவதாக நேற்று அறிவித்துள்ளன. நோர்வே, டென்மார்க், ஐரிஷ் குடியரசு, பல்கேரியா ஆகியன ஏற்கனவே தமது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதை சிறிது காலம் இடைநிறுத்தி உள்ளன. இத்தாலி, ஒஸ்ரியா போன்ற நாடுகள் அஸ்ராஸெனகா தடுப்பூசியின் ஒரு குறிக்கப்பட்ட தயாரிப்புகளின் பாவனையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளன.

இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியனவும் அஸ்ராஸெனகா ஊசி ஏற்றுவதை தள்ளிப்போட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றியோரில் அரிதாக மிகச் சிலரில் இரத்தம் உறைதல்(blood clot) தோலில் இரத்தக் கசிவு போன்ற பக்க விளைவுகள் வெளிப்பட்டதை அடுத்தே நாடுகள் பலவும் அஸ்ராஸெனகா தடுப்பூசியை இடைநிறுத்தி வருகின்றன.

ஜரோப்பாவிலும் ஐக்கிய ராஜ்ஜியத்திலும் இதுவரை 17 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும், அவர்களில் ஆக நாற்பது பேர் மட்டுமே பக்க விளைவுகளைச் சந்தித்துள்ளனர் எனவும் அஸ்ராஸெனகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தம் உறைதலுக்கும் தடுப்பூசி மருந்துக்கும் தொடர்பு இருப்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ‘அஸ்ராஸெனகா’ தடுப்பூசிப் பாவனையை நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பிரான்ஸில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவது உடனடியாக இடைநிறுத்தப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ முகவரகத்தின் தீர்மானம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியாகும் வரை ஊசி ஏற்றுவது முன்னெச்சரிக்கையாக இடை நிறுத்தப்படுகிறது என்று அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.

Montauban நகரில் நடைபெறுகின்ற பிரான்ஸ் – ஸ்பெயின் நாடுகளின் 26 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அரசுத் தலைவர் மக்ரோன், அங்கு வைத்தே இந்தத் தீர்மானத்தை அறிவித் தார்.

இதேவேளை, பிரான்ஸின் Bouches- du-Rhône பிராந்தியத்தில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றிய தீயணைப்பு வீரர் ஒருவர் 48 மணிநேரத்தில் தீவிர பக்கவிளைவைச் சந்தித்ததை அடுத்து அங்கு தீயணைப்பு வீரர்களுக்கு (sapeurs- pompiers) தடுப்பூசி ஏற்றுவது மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தப் பட்டுள்ளது.ஊசி ஏற்றிக்கொண்ட வீரருக்கு ‘cardiac arrhythmia’ எனப்படும் இருதயப் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தடுப்பூசி காரணமா என்பது உறுதியாகக் கூறப்படவில்லை.

நோர்வேயில் தடுப்பூசி ஏற்றிய பின்னர் சுகவீனமுற்ற மூன்று பெண்களில் ஒருவர் உயிரிழந்தார் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் இன்று அறிவித் துள்ளனர். 50 வயதுக்குக் குறைந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவரே மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு (cerebral hemorrhage) காரணமாக உயிரிழந்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *