மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது
கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின் சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய நாள் தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர் கலாசார மண்டபத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகத்தினால் உத்தியோகபூர்வமாக மீள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மெய்நிகராக (Virtual) புலம்பெயர் விருந்தினர்கள் பங்குபற்ற அரங்க நிகழ்வாக நாவலர் கலாசார மண்டபத்தில் வெகுசிறப்பாக நிறைவேறியது.
இந்நிகழ்வு சிரித்திரன் சஞ்சிகையின் நிறுவுனர் மாமனிதர் அமரர் சிவஞானசுந்தரம் மற்றும் அவர் பக்கபலமாக இருந்த மனைவி திருமதி கோகிலம் சிவஞானசுந்தரம் அவர்களுக்கான நினைவோடு ஆரம்பிக்கப்பட்டது.
வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறைத்தலைவர் பேராசிரியர் திரு சிவலிங்கராஜா அவர்களும் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைத் தலைவர் திரு கலாநிதி சி.ரகுராம் அவர்களும் ஒய்வு நிலை ஆய்வு பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
முன்னதாக புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்ச்சியகத்தின் தலைவரான திரு சுரேஷ் கணபதி அவர்கள் தலைமையுரையை மெய்நிகர் (Online) வழியாக ஆற்றினார். சிரித்திரன் சஞ்சிகையை மீள் வெளியிட எடுத்த நோக்கம் மற்றும் இந்த பயணத்தினூடான அனுபவங்களையும் பகிர்ந்தார்.தொடரும் பணிகளில் அனைத்து திறனாளிகளையும் இணைந்து பயணிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.எம் சமூக அடையாளமான சிரித்திரன் சஞ்சிகையை மீள் வெளியிட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர்,அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகம் பெருமையும் அடைவதாக மேலும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திரு சிவலிங்கராஜா அவர்கள், அன்றைய நாள்களில் சிரித்திரன் சிவாஞானசுந்தரம் அவர்களால் சமூக மட்டத்தில் சிரித்திரன் என்ற சஞ்சிகையின் ஊடாக ஏற்படுத்திய சிந்தனைத்தாக்கங்ளை வலியுறுத்திக்கூறியிருந்தார். சிரித்திரன் சுந்தர் அவர்கள் எழுதிய நகைச்சுவை கருத்துக்கள் பலவற்றை அவர் மீள்நினைவுபடுத்தியுமிருந்தார். அவை அனைத்தும் அன்றைய காலத்து எமது சமூக வாழ்வியலையும் பதிவுசெய்வது போல அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து கலாநிதி சி.ரகுராம் அவர்களும் சிரித்திரன் மீள் வெளிவருவது தொடர்பில் தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து அதன் எதிர்கால சஞ்சிகைகள் கொண்டிருக்கவேண்டிய பொறுப்புவாய்ந்த தன்மையையும் வெளிப்படைத்தன்மையோடு பதிவுசெய்திருந்தார்.
அதுபோலவே முனைவர் மனோன்மணி சண்முகத்தாஸ் அவர்களும்,தன் மாணவப்பருவத்திலிருந்து சிரித்திரனை வாசித்துவந்த அனுபவப் பகிர்வையும் அன்றைய காலத்தில் பல்கலைகழக மாணவர்கள் பலர் எழுத்தாளர்களாக பிரகாசித்தார்கள் என்பதையும் வலியுறுத்திக் கூறியிருந்தார்.
முக்கியமாக இந்த வெளியீட்டுநிகழ்வில் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களின் நேரடி குடும்ப உறுப்பினர்கள் சார்பில் அவர் மகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். அத்துடன் சிரித்திரன் சஞ்சிகை மீள்வெளியீடு செய்வதற்கான தன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆறு தசாப்தங்களுக்கு முன் சிறப்பான நகைச்சுவை துணுக்குகள்,கருத்தாழம் மிக்க ஓவியங்கள்,சமூக வெளிப்பாடாகிய சிந்தனை கருத்துக்கள் ஊடாக மக்கள் மத்தியில் இடம்பிடித்த சிரித்திரன் சஞ்சிகையின் மீள் வரவு பலருக்கும் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிநடை இணையம்,மற்றும் வெற்றிநடை நேரலை இம் முயற்சியில் கைகோர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்கிறது.