விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.
நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை.
இந்திய விவசாயிகள் தமது விவசாயப் பொருட்களை தாம் விரும்புகிற கொள்வனவாளர்களிடம் விற்கலாம், அதன் மூலம் அவர்களுக்கு தமது தயாரிப்புகளின் மீதான முழு உரிமை கிடைக்கிறது, முன்னரைப் போலத் தொடர்ந்தும் உள்ளூர் கொள்வனவாளர்களிடம் மட்டும் விற்கும் அவசியமில்லை, என்கிறார் மோடி.
போராடும் விவசாயிகளோ அப்படியான நிலைமைக்குப் பயப்படுகிறார்கள். அது, பலமான சர்வதேச விவசாயப் பொருள் கொள்வனவாளர்களுக்கே உதவும். அவர்கள் தங்களுக்கு அதிக இலாபம் வேண்டி குறைவான விலைகளுக்கே கொள்வனவு செய்ய முயல்வார்கள் என்பது விவசாயிகளின் வாதம்.
போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு ஓரளவு இறங்கிவந்து சில தானியங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆகக்குறைந்த விலையை முன்னரே நிர்ணயம் செய்ய அரசு தயாராக இருப்பதாகச் சொல்கிறது. ஆனால், முழுவதுமாக அச்சட்டத்தைப் பின்வாங்கச் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
விவசாய மந்திரியுடன் போராட்டக்காரர்கள் நடாத்திய பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை வெற்றியடையாததால் நாட்டின் உச்ச நீதிமன்றம் இடையே நுழைந்து அரசு கொண்டுவரவிருந்த சட்டங்களை ஒத்திப்போடச்சொல்லியும் இது பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒரு குழுவை நியமிக்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் அரைவாசித் தொழிலாளிகள் வெவ்வேறு அளவிலான விவசாயங்களில்தான் தமது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். நீண்டகாலமாகவே விவசாயத்துக்கான விதைகள், உரங்கள் உட்பட்ட முதலீடுகளின் விலை அதிகரித்து வருகிறது ஆனால், தமது விளைச்சலின் இலாபமோ குறைந்தே வருவதாக இந்திய விவசாயிகள் குறைப்பட்டு வருகிறார்கள்.
இலாபம் குறைந்துகொண்டே வருவதால் விவசாயிகள் தமது தயாரிப்பை விற்குமிடங்களில் அதிக வட்டிக்குக் கடனெடுப்பதால் அவர்களுடைய பொருளாதார நிலைமை மேலும், மேலும் பலவீனமடைந்துகொண்டே வருகிறது. நாளடைவில் கொள்வனவாளர்கள் கடன் வாங்கிய விவசாயிகள் மீது அதிகாரமுள்ளவர்களாகிவிடுகிறார்கள். அந்த நிலைமையை மாற்றவே அரசு புதிய சட்டத்தின் மூலம் விரும்புகிறது.
மோடி அரசு பதவிக்கு வந்தது முதலே வெவ்வேறு அளவிலான தொழில்களில் முதலீடு செய்பவர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் விவசாயத்துறையில் செய்யப்படும் மாற்றங்களுக்குக் காரணமும் முதலீடு செய்பவர்களுக்கு மேலும், ஆதரவு கொடுக்கவே என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.
முதலீட்டாளர்களோ மோடி அரசு விவசாயத் துறையின் மாற்றங்களில் மேலும் அதிகம் செய்திருக்கலாமென்று விரும்புகிறார்கள். இந்தியாவின் விவசாயத்துறையின் முக்கிய பிரச்சினை விவசாயம் செய்யுமிடத்திலிருந்து சாதாரண கொள்வனவாளர்கள் வரை எட்டுவதுவரை இருக்கும் மிகப்பெரும் தடங்கல்களே என்று அவர்கள் கருதுகிறார்கள்.
விவசாயியின் பொருட்களை உடனுக்குடன் கொள்வனவு செய்து போக்குவரத்து மூலம் பெரும் மண்டிகளுக்குக் கொண்டு சென்று அவைகளை தனியார் கொள்வனவுக்குத் தயார்படுத்தும் வசதிகள் இந்தியாவில் மோசமாக இருப்பதால் ஏகப்பட்ட விவசாயப்பொருட்கள் அநியாயமாகக் குப்பையாகும் அதே சமயம் இன்னொரு பக்கம் இந்தியாவில் தேவைக்கான உணவின்றிப் பல மில்லியன் பேர் வாடுகிறார்கள்.
இந்திய அரசு வேகமான கொள்வனவு, போக்குவரத்து போன்றவற்றை மேன்மைப்படுத்தி வசதிகளுள்ள பாரிய மண்டிகளை ஆங்காங்கே நிறுவவேண்டுமென்று குறிப்பிடுகிறார்கள் விவசாயப் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள். இப்படியான பலவீனமுள்ள விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்கே பல நிறுவனங்கள் தயங்குவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்திய விவசாயிகளின் கல்வித் தகுதி, தற்காலம் பற்றிய புரிதல் மோசமாக இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மோடி அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயத்துறை பற்றிய சட்டங்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், அதனால் எதிர்பார்க்கப்படும் விளைவுகளையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு இந்திய விவசாயிகளிடம் அறிவு மேன்மை இல்லை.
எனவே விவசாயிகளின் அறிவுத் தரத்தை மேம்படுத்தவும் இந்திய அரசு வழிமுறைகளைச் செய்யவேண்டும் என்கிறார்கள் விமர்சகர்கள். எந்தக் கொள்வனவாளரையும் விவசாயி தானே தேடித் தனது பொருட்களை விற்கவேண்டுமானால் அவர்களுக்கு இணையத் தளத்தை அதற்காகப் பாவித் தெரியவேண்டும். குறிப்பிட்ட பொருட்களின் சந்தை விலைகளை அறிந்துகொண்டு தனக்கான விலையை நிர்ணயிக்கவும், தனது விவசாய உற்பத்திப் பொருளை மாற்றிக்கொள்ளவும் விவசாயிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல் விவசாயிகள் தொடர்ந்தும் உள்ளூர் முதலீட்டுப் பணக்காரர்களின் அடிமைகளாகவே தொடர்ந்தும் இருக்கப்போகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்