வடகடலிலிருக்கும் தீவொன்றிலிருக்கும் ஒற்றைக் கட்டடத்தில் தனியொருவர் சினிமா பார்க்கப்போகிறார் ஒரு வாரத்துக்கு.
இவ்வருட கொத்தன்பெர்க் சினிமா விழா தனிமைப்படுத்தல் சமூக ரீதியில் எவ்வித விளைவுகளை உண்டாக்குகின்றது என்ற சிந்தனையை உண்டாக்குவதற்காக அறிவித்த போட்டியில் வென்றவர் லிசா என்ரோத், என்ற மருத்துவசாலை அவசரசேவைப் பிரிவுத் தாதி. இவருக்கான பரிசு தனித் தீவில், தனிக்கட்டடடத்தில் ஒற்றையாளாக இருந்து ஒரு வாரத்துக்குச் விழாவின் சினிமாக்களைப் பார்ப்பதாகும்.
ஸ்கண்டினேவியாவின் மிகப்பெரிய சினிமா விழாவான கொத்தன்பெர்க் சினிமா வருடாவருடம் ஜனவரி 29 – பெப்ரவரி 08 வரை நடைபெறுவதுண்டு. இவ்வருடம் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடுகளால் சினிமாக்களில் மக்கள் கூட்டம் அனுமதிக்கப்படவில்லை. எனவே, வழக்கமாக விழா நடக்கும் கொட்டகையில் ஒரேயொரு நபருக்கே அனுமதிச் சீட்டு விற்கப்பட்டுள்ளது. மேடையில் வழக்கம்போல சினிமா சம்பந்தப்பட்டவர்கள் தோன்றுவார்கள், விவாதங்கள், பேச்சுகள் நடக்கும்.
சினிமாப் பார்வையாளர்களுக்காக தொலைத்தொடர்புகள் மூலம் விழா நிகழ்ச்சிகளைக் காண ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.
12,000 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லிசா என்ரோத், படகொன்றின் மூலம் ஹம்னெஸ்கார் என்ற தீவுக்குப் போயிருக்கிறார். அங்கே தற்போது பாவிக்கப்படாத ஒரு வெளிச்ச கோபுரமும், பக்கத்திலேயே ஒரு விடுதியும் மட்டும் இருக்கின்றன. விடுதியின் அறையிலோ, வெளிச்சக் கோபுரத்திலோ லிசா தனிமையாகச் சினிமாக்களைப் பார்க்கவிருக்கிறார்.
“கொரோனா நோயாளிகளுக்காகச் சேவை செய்த கடந்த மாதங்கள் என்னை உடல் ரீதியாகவும், மனது ரீதியாகவும் மிகவும் சோர்வடையவைத்திருக்கிறது. இந்த வாரத்தில் நான் தனியாக இருந்து கடந்துபோன சம்பவங்களை நினைவுபடுத்தி எனக்குள் ஆராய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்,” என்கிறார் லிசா.
“இந்தப் பெருவியாதிக்காலம் எம்மில் பலரை மீண்டும் சினிமாவை நோக்கித் திரும்பவைத்திருக்கிறது. ஆனால், நாம் அவைகளைத் தனிமையில் பார்க்கவைத்திருக்கிறது. சேர்ந்திருந்து சினிமா பார்க்கும் உணர்வை இழந்து வேறு விதமாகச் சினிமாவை அணுக நாம் எம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதே தனிமைப்படுத்தல், சமூக விலகல் போன்றவை எங்களைப் பல விதங்களிலும் பாதித்து வருகின்றன. இந்தச் சினிமா விழாவின் சிந்தனைக்காக கரு இதுதான்,” என்கிறார் கொத்தன்பெர்க் சினிமா விழாவுக்குப் பொறுப்பாளரான யோனாஸ் ஹோல்ம்பெர்க்.
சாள்ஸ் ஜெ. போமன்