இந்தியாவிலிருந்து அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் பெற்று ஹங்கேரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயன்ற பங்களாதேஷ்.
ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென்று பின்னர் ஹங்கேரி அறிவித்திருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒட்டிப் பிறந்த பங்களாதேஷ் பெண்குழந்தைகளான ரபேயா, ருகாயா ஆகியோர் 3 வயதாகும்போது அவர்களைப் பிரித்தெடுத்து உதவியது ஒரு ஹங்கேரிய மருத்துவக் குழு. ஹங்கேரியைச் சேர்ந்த Action for Defenceless People Foundation என்ற மனிதாபிமான அமைப்பின் 35 மருத்துவர்கள் பங்களாதேஷின் டாக்கா இராணுவ மருத்துவமனையில் அந்தச் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர்.
அதற்கு நன்றி செலுத்துவதற்காகவே பங்களாதேஷ் குறிப்பிட்ட 5,000 மருந்துகளை நன்கொடையாக வழங்க முன்வந்தது என்று தெரியவருகிறது. ஆனாலும், ஒன்றியத்தின் முதலாவது நாடாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V , சீனாவின் சினோபார்மா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கும் ஹங்கேரி பங்களாதேஷுக்குத் தனது நன்றியைத் தெரிவித்து மறுத்துவிட்டது.
இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் அஸ்ரா ஸெனகா மருந்துகளை இலவசமாகப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் மொத்தமாக அதே நிறுவனத்தின் 5 மில்லியன் தடுப்பு மருந்துகளைக் கைவசம் வைத்திருக்கிறது. மேலும் 25 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்க ஸெரும் இன்ஸ்டிடியூட்டிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்