இந்தோனேசியப் பாடசாலை மாணவிகளை இஸ்லாமிய முக்காடு போடக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தும்படி அரசு உத்தரவு போட்டிருக்கிறது.
இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு சுமாத்திராவில் பெடாங் பிராந்தியத்தில் ஒரு கல்லூரி தனது மாணவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தலையில் இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டே வரவேண்டுமென்ற கட்டுப்பாடு போட்டதால் மாணவர்கள், பெற்றோர்களிடையே எதிர்ப்பு உண்டாயிற்று.
அந்தக் குற்றச்சாட்டு நாட்டின் கல்வி, கலாச்சார அமைச்சருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்கான முடிவை அமைச்சர் நதீம் மக்கரீம் “கல்விக்கூடங்கள் நடுநிலைமையாக எந்த மதம் சாராதவையாகவும் செயற்படவேண்டும். இந்தோனேசியாவின் கலப்புக் கலாச்சாரம் அங்கே எதிரொலிக்க வேண்டும். ஒருவர் தனது மத அடையாளங்களைக் கொண்டிருப்பது அவரது தனிப்பட்ட விடயம். அதை எந்த ஒரு திணைக்களமும் திணிக்கலாகாது,” என்று அறிவித்திருக்கிறார்.
இதே போன்ற பல குற்றச்சாட்டுக்களும் அப்பிராந்தியத்தில் எழுந்திருக்கின்றன. எனவே கல்வி, கலாச்சார அமைச்சருடன் மதங்களுக்கான அமைச்சர், உள்ளூராட்சி அமைச்சரும் அந்த முடிவில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். மத அடையாளங்களைக் காவும்படி எந்த ஒரு மாணவ, மாணவியரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்ற இந்தோனேசியாவின் கோட்பாடு நாட்டின் எல்லாம் மாகாணங்களிலும் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்