117 வயது ஜரோப்பிய மூதாட்டிவைரஸை வென்று மீண்டார்!
பிரான்ஸில் வசிக்கும் 117வயதான அருட்சகோதரி ஆன்ட்ரே (Sœur André) வைரஸ் தொற்றில் இருந்து பூரண சுகம் பெற்று விட்டார் என்று அறிவிக்கப்படு கிறது.
பிரான்ஸின் Toulon(Var) நகரில் மூதாளர் இல்லம் ஒன்றில் வசித்துவருகின்ற அருட்சகோதரி ஆன்ட்ரே, நாளை 11 ஆம் திகதி தனது 117 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இந்நிலையில் அங்குள்ள ஏனைய பலரைப் போன்றே கடந்த மாதம் அவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானார்.
மூதாளர் இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 80 பேருக்கு பெரும் கொத்தாக வைரஸ் தொற்றியது. அவர்களில் ஏழு பேரைத் தவிர அனைவரும் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர். வயதில் மிக மூத்தவரான ஆன்ட்ரே சில வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு தொற்றின் அறிகுறிகள் பெரிதாகக் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனவரி 16 ஆம் திகதி அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் நான்கு வார காலம் நோயுடன் போராடிய அவர் கடைசியில் கொரோனா வைரஸை வென்று மீண்டெழுந்துள்ளார் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மூதாளர் இல்லத்தில் கூடியிருந்த பலரது கரகோஷத்துக்கு மத்தியில் அவர் தனது குடும்பத்தினருடனும் நகர மேயருடனும் வீடியோ ஊடாக உரையாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது.
விரைவிலேயே அவர் தனது வழமையான தேவாலயப் பிரார்த்தனைகளுக்குச் செல்லக்கூடும் என்ற நம்பிக்கையான செய்தி வெளியாகி உள்ளது.
பிரான்ஸிலும் ஐரோப்பிய அளவிலும் அதிக காலம் உயிர் வாழ்கின்றவர்களில் ஆன்ட்ரே முதல் இடத்தில் உள்ளார். உலகில் வயதில் மூத்த இரண்டாவது பெண்ணும் அவரே ஆவார். ஜப்பானைச் சேர்ந்த 118 வயதான Kane Tanaka என்பவரே உலகின் அதிமூத்த முதலாவது மூதாட்டி என்ற பெருமையோடு இன்னமும் வாழ்ந்து வாழ்கிறார்.
குமாரதாஸன். பாரிஸ்.