இந்தியாவின் 20 விகிதமான நிலப்பரப்பின் நிலக்கீழ் நீர் பாவிப்பவர்களுக்கு ஆபத்தையூட்டும் நஞ்சு நிறைந்ததாகக் காணப்படுகிறது.
பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்கிறது ஆராய்ச்சி.
இந்துஸ், கங்கா, பிரம்மபுத்ரா நதிப்படுக்கைகளின் நிலப்பகுதிகள் மிகவும் அதிக நச்சுத்தன்மையுள்ள நிலக்கீழ் நீரைக் கொண்டிருக்கின்றன. பஞ்சாப் [92%], பீகார் [70 %], மேற்கு வங்காளம் [69%], அஸாம் [48%], ஹரியானா [43%], உத்தர் பிரதேஷ் [28%], குஜராத் [24%] ஆகிய மாநிலங்களே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தவிர மத்திய பிரதேஷ், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் ஆங்காங்கே நச்சுக்கலந்த நிலக்கீழ் நீரைக் கொண்டிருக்கிறது. அவைகள் தவிர்ந்த மாநிலங்களில் அபாயகரமான நச்சுள்ள நிலக்கீழ் நீர்ப்பரப்பு மிகக்குறைவு அல்லது இல்லை என்கிறது ஆராய்ச்சி.
நிலக்கீழ் நீர் நச்சுத்தன்மையாக மாறக் காரணமாக விவசாய முறைகளும், நிலத்தின் கீழ் ஏற்பட்டுவரும் புவியியல் மாறுதல்களும் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த நிலைமையை நேரிட ஆபத்தான நிலையிலுள்ள மாநிலங்கள் தமது நிலக்கீழ் நீரை ஆராய்வதை மேலும் அதிகப்படுத்தவேண்டும். அதன் மூலம் நிலைமையை அறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறார்கள் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்